
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் மோசஸ் தலைமையில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ் பாபு ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் முத்து ஆகியோர் சிதம்பரம் சார் ஆட்சியர் மதுபாலனை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், “கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகரில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நீண்ட நெடிய போராட்டதிற்கு பின்பு தமிழக அரசு ஏற்று நடத்துவது என்ற அடிப்படையில் தற்போது தமிழ்நாடு அரசு பல்கலைக்கழகமாக நடந்து வருகிறது.
இதே நிர்வாகத்தின் கீழ் செயல்படும் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும் (RMMCH) அரசே ஏற்று நடத்த வேண்டும். இம்மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றி கடலூர் மாவட்ட மக்கள் பயன்படும் வகையில் தமிழக அரசு செயல்படுத்திட வேண்டும் என்கின்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசின் சுகாதாரத் துறையின் கீழ் ஏற்று நடத்துவது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. உண்மையில் இப்பகுதி மக்கள் இச்செய்தியை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அதன்பின்பு மருத்துவமனையில் அனைத்து துறையிலும் தலைமை மருத்துவர்கள் மற்றும் (CARDIO) இருதயம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் கண்டுபிடிப்பு அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளும் கூடுதல் படுக்கை வசதிகள் அவசர பிரிவு விரிவுபடுத்துவது குறிப்பாக, இங்கு எவ்வகை நோயாளிகள் வந்தாலும் (REFER) வேறு மருத்துவமனைக்கு அனுப்பாமல் இங்கேயே குணப்படுத்துவது என்ற நிலையை உருவாக்கிட வேண்டிய சூழலில் கரோனா எனும் பெருந்தொற்று மிகப்பெரிய பாதிப்பை மனிதகுலத்திற்கு உருவாக்கி உள்ளது.
இதை எதிர்த்த போராட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழக அரசு இம்மருத்துவமனையை கடலூர் மாவட்ட தொற்று நோய்க்கான மையம் என அறிவித்தது. தற்சமயம் வரை இம்மருத்துவமனை பல மனித உயிர்களை இந்த பெரும் தொற்றிலிருந்து காப்பாற்றி வருகிறது. இதுபோன்ற இக்கட்டான சூழலில் இங்கு பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள், முன் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவரும் இரவு பகல் பார்க்காமல் கடுமையாக செயல்பட்டு வருவது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிற இந்த நேரத்தில் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
ஆனால், இப்பெரும் தொற்றில் பாதிக்கப்பட்டு இம்மருத்துவமனையில் சேர்கிற பல நோயாளிகள், தனியார் மருந்துகடை மற்றும் பரிசோதனை நிலையங்களில் நோய்களுக்கு தேவையான அனைத்தும் பணம் கொடுத்து வாங்கி கொடுக்கவேண்டிய கட்டாயம் உள்ளது. அவர்கள் வாங்கி கொடுத்த பின்பே சிகிச்சை வழங்குகின்ற கொடுமை நடந்து வருகின்றது. இந்த நேரத்தில் இதுபோன்ற செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது. எப்படியாவது உயிரை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு மருத்துவர்கள் சொல்லும் அனைத்தையும் நோயாளியின் உறவினர்கள் செய்து வருகின்றனர்.
புதிதாக அமைந்துள்ள தமிழக அரசு தமிழகம் முழுவதும் கரோனா நோயால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு இலவசமாக உயிர்க்காக்கும் சிகிச்சை அளிக்கும் சூழலில் இந்த மருத்துவமணையிலும் அந்த நிலை தொடர ஆவண செய்ய வேண்டும். இப்பகுதி மக்கள் நலன் கருதி காலம் தாழ்த்தாமல் உத்தரவு பிறப்பிக்க தமிழக அரசு முன்வர வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளனர்.