கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் தொகுதி எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன், சுமார் 91 கோடி 70 லட்சம் மதிப்பில் 3,454 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினார். நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஏ.வ.வேலு, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பயனளார்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சரும் கள்ளக்குறிச்சி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளருமான ஏ.வ. வேலு பேசியதாவது; “விரைவில் தமிழக அளவில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், 100% கரோனா தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. ரிஷிவந்தியம் தொகுதியில் 3,454 பயனாளிகளுக்கு 91 கோடியே 70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளோம். விரைவில் ரிஷிவந்தியம் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட உள்ளது.
இந்த தொகுதியில் ஓடும் தென்பெண்ணை ஆற்றில் மணலூர்பேட்டை அருகே ரூ. 20 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட உள்ளன. திருவண்ணாமலையிலிருந்து தியாகதுருகம் வரை ஏற்கனவே உள்ள நெடுஞ்சாலை ரூ.80 கோடி செலவில் நான்கு வழிச்சாலையாக உருவாக்கப்படும். இந்தத் தொகுதியில் தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை ஆகியவை வரும் காலங்களில் உருவாக்கப்படும்.” இவ்வாறு அமைச்சர் ஏ.வ. வேலு பேசினார்.
தொகுதி எம்.எல்.ஏ.வான வசந்தன் கார்த்திகேயன், “தமிழகத்திலேயே குடிநீர் பற்றாக்குறை இல்லாத தொகுதியாக ரிஷிவந்தியம் தொகுதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தத் தொகுதி வளர்ச்சி அடையவில்லை. கிராமப்புறங்களை உள்ளடக்கிய மிகவும் பின்தங்கிய தொகுதி; இதை முன்னேற்றம் அடையச்செய்யும் வகையில் அரசு திட்டங்களை கொண்டுவந்து விரைந்து நிறைவேற்றுவதற்கு அதிகாரிகளும், தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் நானும் தீவிர கவனம் செலுத்திவருகிறோம். இன்னும் நான்கரை ஆண்டுகளில் ரிஷிவந்தியம் தொகுதியை ஒரு முன்மாதிரியான வளர்ச்சியடைந்த தொகுதியாக மாற்றிக் காட்டுவோம்.
மக்கள் பிரச்சினைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான நமது அரசு. எனவே, தொகுதி மக்கள் அரசு சார்ந்த உதவிகளை, திட்டங்களை பெறுவதற்கு எப்போது வேண்டுமானாலும் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.” இவ்வாறு எம்.எல்.ஏ. வசந்தன் கார்த்திகேயன் பேசினார்.