Skip to main content

மாந்திரீகம் செய்வதாகக் கூறி இளம்பெண்ணிடம் மோசடி; போலி சாமியாருக்கு வலைவீச்சு

Published on 19/01/2023 | Edited on 19/01/2023

 

 fake preacher who scammed  young woman claiming practice witchcraft

 

நாமக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணிடம் மாந்திரீகம் செய்வதாகக் கூறி பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற போலி சாமியாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.    

 

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகில் உள்ள பச்சுடையாம்பட்டி புதூரைச் சேர்ந்தவர் வினோத்குமார். இவருடைய மனைவி கீர்த்தனா (23). கடந்த சில நாள்களுக்கு முன்பு, கீர்த்தனா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது காவி வேட்டி, சட்டை, கழுத்து நிறைய ருத்ராட்ச மாலைகள் அணிந்து கொண்டு வந்த மர்ம நபர் ஒருவர், கீர்த்தனாவிடம் சென்று உங்களுக்கு நேரம் சரியில்லை. சிலர் உங்கள் வீட்டில் சூனியம் வைத்துள்ளனர். அதனால் உங்கள் குடும்பத்தினருக்கு உடல்நலக்குறைவு, பணக்கஷ்டம் ஏற்படும். மாந்திரீகத்தின் மூலமாக வீட்டில் உள்ள சூனியத்தை எடுத்துவிட்டால் உங்கள் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும் என்று கூறியுள்ளார். 

 

பின்னர் அந்த மர்ம ஆசாமி, தான் வைத்திருந்த விபூதியை எடுத்து கீர்த்தனாவின் முகத்தில் வீசினார். மேலும், அவர் சாம்பிராணி புகையும் போட்டார். இதில், வீடு முழுவதும் சாம்பிராணி புகை பரவிய நிலையில், கீர்த்தனாவின் வீட்டு பீரோவில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயை திருடிக்கொண்டு மர்ம ஆசாமி அங்கிருந்து ஓட்டம் பிடித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த கீர்த்தனா, இதுகுறித்து சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.  

 

 

சார்ந்த செய்திகள்