
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே அய்யர்மலையில் அருள்மிகு ரத்தினகிரீஸ்வரர் மலைக்கோயில் உள்ளது. பழமைவாய்ந்த இந்த திருக்கோயிலில் 1,017 படிகள் உள்ளன. மிக செங்குத்தாக இருக்கும் இந்த மலையில் முதியவர்கள், சிறியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோர் மலை ஏறுவதற்கு சிரமப்படுகிறார்கள். இது தொடர்பாக ரோப் கார் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல வருடங்களாக உள்ளது. எனவே, கடந்த 2010ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது ரோப் கார் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டு, பிறகு 2015இல் மீண்டும் ரோப் கார் அமைக்க டெண்டர் கோரப்பட்டது. 2017ஆம் ஆண்டு டெண்டர் இறுதி செய்யப்பட்டு, 18 மாதத்தில் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவந்தன. ஆயினும் தொடர்ந்து பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றதால் அந்தப் பணிகளை விரைந்து முடிக்க இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, துறை ரீதியான அதிகாரிகள் உள்ளிட்டோர் இன்று (17.06.2021) கோவிலை ஆய்வுசெய்தனர். ஆய்விற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, “ரூ. 7 கோடி மதிப்பில் நடைபெறும் இந்த ரோப் கார் திட்டப்பணிகள் ஜனவரி மாதமே முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தபோதும் பணிகள் தொடர்ந்து தொய்வாக நடைபெறுகின்றன.

அப்பணிகளை விரைந்து முடிக்க 15 நாட்களுக்கு ஒருமுறை ஆய்வுசெய்து விரைவுபடுத்த அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் இன்று இந்த ஆய்வினை மேற்கொண்டோம். நடப்பாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவுபெற்று, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடும் வகையில் பணிகளைத் துரிதப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது” என்றார். திமுக முன்னாள் தலைவர் கலைஞர் முதன்முதலாக குளித்தலை தொகுதியில் நின்று வெற்றிபெற்றவர். ஆயினும் இதுவரை குளித்தலை நகரத்திற்கு நிரந்தரமான நவீன பேருந்து நிலையம் இல்லாமல் உள்ளது.
இதுகுறித்து பொதுமக்கள் பல்வேறு போராட்டங்களும் மனுக்களும் அரசுக்கு அனுப்பியதன் அடிப்படையில் பலமுறை தேர்வு செய்தபோது அறநிலையத்துறை இடத்தேர்வு செய்ததால் அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. தற்போது அறநிலையத்துறை அமைச்சராக இருக்கும் உங்கள் நடவடிக்கையால் இந்தப் பணிகள் முடிக்கப்படுமா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் மனு அளித்தால் உடனடியாக அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் பேருந்து நிலையம் அமைக்க அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.