Skip to main content

பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என சோமனூரில் உறவினர்கள் தர்ணா

Published on 24/09/2017 | Edited on 24/09/2017

பேருந்துநிலைய விபத்தில் அரசு நிதியுதவி அளிக்கவில்லை என 
சோமனூரில் உறவினர்கள் தர்ணா


கோவை மாவட்டம் சோமனூர்  பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில்,  படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு அரசு நிதியுதவி வழங்கவில்லை என கூறி உறவினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 கடந்த 7ம் தேதி  ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர், 12 பேர் படுகாயமடைந்தனர். இதில், இடது காலை இழந்த 20 வயதான மாணவி லதா டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் தொற்று காரணமாக மீண்டும் சிகிச்சைக்காகவும், வலது காலில் படுகாயமடைந்த முதியவர் மாரப்பன் ஆகிய இருவர் கோவை திருச்சி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்நிலையில், மாணவி லதாவிற்கு பல்வேறு வகைகளில் கடன் பெற்றது மூலம் ரூ.2.92 லட்சம் ஏற்கனவே மருத்துவ செலவு செய்த நிலையில், இனிமேலாகும் கூடுதல் செலவை கூலி தொழிலாளியான தன்னால் எவ்வாறு கட்ட முடியும் என்று கூறும் மாணவியின் தந்தை நாராயணசாமி, சம்பவம் நடந்தபோது மருத்துவ செலவை முழுமையாக ஏற்பதாக அமைச்சர்கள், ஆட்சியர் அளித்த உத்தரவாதம் எதுவும் நடைமுறையில் இல்லை என்கிறார். இதேபோல், ரூ.1.25 லட்சம் வரை தங்களின் வருமானத்திற்கு மேல் செலவு செய்தும் தனியார்  மருத்துவமனை நிர்வாகம் கேட்கும் கூடுதலான தொகையான ரூ.1.5 லட்சம் கட்ட முடியாது சூழலில் இருப்பதால் அமைச்சர்கள், ஆட்சியர் உத்தரவாதம் அளித்தது போல் மருத்துவ செலவை ஏற்க வேண்டும் எனக்கூறி படுகாயமடைந்த இருவரின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தற்போது மாரப்பனை டிஸ்சார்ஜ் செய்ய மருத்துவமனை நிர்வாகம் மறுப்பதாகவும், உடனடியாக மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் தலையிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணத்தை பெற்று தர வேண்டும் என்று வலியுறுத்தினர். 

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் நல்ல முறையில் சிகிச்சை அளித்ததாகவும், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் சொல்வது போன்று அரசு தரப்பில் எந்தவித உத்தரவாதம் அளிக்கவில்லை என்றனர்.

- அருள்

சார்ந்த செய்திகள்