காவிரியில் புதிய அணை கட்டுவதற்குத் தமிழக அரசு
ஒப்புதல் அளிக்கக்கூடாது: திருமாவளவன் வலியுறுத்தல்
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
’’காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்மீது மேல்முறையீடு செய்துள்ள வழக்கு உச்சநீதிமன்றத்தில் இப்போது நடந்து வருகிறது. அந்த வாதத்தின்போது கர்னாடக அரசு மேகெதட்டுவில் புதிய அணை கட்டுவதற்கு அனுமதியளித்தால் என்ன? என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கேட்டுள்ளனர். அதற்கு தமிழக தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக அரசின் இந்த நடவடிக்கை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கிவிடும். எனவே, மேகெதட்டுவில் கர்னாடக அணை கட்ட தமிழக அரசு சம்மதிக்கௌஉடாது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
மேகெதட்டுவில் நீர்மின் திட்டத்துக்காக அணைகளைக் கட்டுவதற்கு கர்னாடகா பல ஆண்டுகளாகவே முயற்சித்து வந்தது. வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசில் எரிசக்திதுறை அமைச்சராக இருந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அதற்கு அப்போது அதரவாக இருந்தார். ''கர்னாடக அரசு காவிரியில் உருவாக்கவுள்ள நான்கு நீர்மின் திட்டங்களையும் தேசிய புனல் மின் கழகத்திடம் (என்.எச்.பி.சி) ஒப்படைத்துவிட்டால் காவிரியில் வரும் நீரின் அளவையும், தமிழகத்துக்குச் செல்லும் தண்ணீரின் அளவையும் சரியாக அளவிட முடியும். இநதப் பிரச்சனை முடிவுக்கு வர அது உதவும்'' என்று ரங்கராஜன் குமாரமங்கலம் அப்போது கூறியிருந்தார். அதை அன்றைக்கே முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் கடுமையாக எதிர்த்தார்.
சிவசமுத்திரத்தில் 270 மெகாவாட் மின் உற்பத்தி நிலையமும், ராசிமனாரில் 360 மெகாவாட், மேகெதட்டுவில் 400 மெகாவாட் திறன் கொண்ட நிலையங்களும், ஒகனேக்கல்லில் 120 மெகா வாட் மின் உற்பத்தி நிலையமும் அமைத்திட கர்னாடகா ஏற்பாடு செய்து வருகிறது. இந்தத் திட்டங்களுக்கு தமிழகத்தின் ஒப்புதலைப் பெறுவதற்காக இந்த மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கார்னாடகம் அறுபது சதவீதம் எடுத்துக்கொண்டு தமிழ்நாட்டுக்கு 40 சதவீதம் தந்து விட வேண்டும் என்றும் மத்திய அரசு சார்பில் குறிப்பிடப்பட்டது. அதற்கும் அன்று தமிழ்நாடு சம்மதிக்கவில்லை.
பாஜக தற்போது மீண்டும் மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் நிலையில் கர்னாடகத்துக்கு ஆதரவான பழைய திட்டத்தை நீதிமன்றத்தின்மூலம் அது செயல்படுத்த முயற்சிக்கிறதோ என்ற ஐயம் நமக்கு எழுகிறது.
மேகெதட்டுவில் நீர்த் தேக்கம் கட்டப்பட்டால் அது இப்போது மேட்டூருக்கு வந்துகொண்டிருக்கும் மிச்சமீதி தண்ணிரையும் தடுத்துவிடும். அதன்பின்னர் கர்னாடகத்தில் வெள்ளம் வந்தால்கூட தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் கிடைக்காது. தமிழ்நாட்டின் டெல்டா மாவட்டங்களைப் பாலைவனமாக்கும் இந்த சதித் திட்டத்துக்கு தமிழ்நாட்டுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்கள் ஒப்புதல் தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக முதல்வர் உடனடியாகத் தமிழ்நாட்டு நிலையைத் தெளிவுபடுத்தவேண்டும். கர்னாடகம் கட்டவுள்ள அணைகளுக்கு உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.’’