அரசியல் கட்சி போலவே ரஜினி மக்கள் மன்றத்திலும் கோஷ்டி பூசல் உருவாகி வருகிறது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு திண்டுக்கல் மாவட்ட செயலாளராக இருந்த தம்புராஜை ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து அதிரடியாக நீக்கியதுடன் மட்டுமல்லாமல் மாவட்ட செயலாளர் பதவியையும் பறித்து தம்புராஜை மாநில நிர்வாகம் ஓரம்கட்டியது. இதனால் தம்புராஜ் ஆதரவாளர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆனால் மற்றொருபுறம் மக்கள் மன்றத்தில் உள்ள பொருப்பாளர்களும், ரசிகர்களும் தம்புராஜை தூக்கியதை கண்டு சந்தோஷம் அடைந்து வந்தனர். இந்நிலையில்தான் கடந்த மாதம் சென்னையில் உள்ள மக்கள் மன்றம் தலைமையில் இருந்து திண்டுக்கல் மாவட்டத்திற்கு புதிதாக பட்டிவீரன் பட்டியை சேர்ந்த ரகு என்பவரை மாவட்ட செயலாளராக அறிவித்தது. அதை கண்டு டென்ஷனான தம்புராஜ் ஆதரவாளர்கள் தலைமையையும், ரகுவையும் கண்டித்து மாவட்ட அளவில் கண்டன போஸ்டர்களை ஒட்டினார்கள்.
இதனால் ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ள ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதோடு தலைவரின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்ட தம்புராஜ் ஆதரவாளர்களான வெங்கடேஷ், ஜோசப், செந்தில், சரவணன், நாகராஜ் உள்பட சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமைக்கு மாவட்ட மக்கள் மன்றத்தின் தலைவரான எஸ்.டி.பாணியும், மாவட்ட செயலாளருமான ரகுவும் கடிதம் எழுதியிருந்தனர். அதன் அடிப்படையில் தம்புராஜ் ஆதரவாளர்களிடம் இருந்த பதவிகளை பறித்ததுடன் மட்டுமல்லாமல் இனி மேல் தம்புராஜூடன் தொடர்பு வைத்து கொள்ள கூடாது என மாநில மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அப்படி இருக்கும் போது தற்பொழுது காலா படம் திரைக்கு வந்ததையொட்டி அங்கங்கே உள்ள ரசிகர்கள் ரஜினியை வாழ்த்தி போஸ்டர்களும் ஒட்டி இருக்கிறார்கள். அது போல் திண்டுக்கல் உள்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் ரஜினி மக்கள் மன்றம் மூலம் வாழ்த்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். இதில் தலைமையின் கட்டுப்பாட்டை மீறி தம்புராஜ் ஆதரவாளர்கள் அடித்து ஒட்டியுள்ள போஸ்டரில் தம்புராஜ் படத்துடன் மாவட்ட பொருப்பாளர் அரவிந்த் படமும், மாநில நிர்வாகிகளான வி.எம்.சுதாகர், ராஜுமகாலிங்கம், இளவரசன் ஆகியோர் படங்களுடன் லதா ரஜினிகாந்த் படத்தையும் போட்டு ஒட்டி இருக்கிறார்களே தவிர மாவட்ட தலைவர் எஸ்.டி.பாணி மற்றும் மாவட்ட செயலாளர் ரகு படங்களையோ பெயர்களையோ போடவில்லை.
இதனால் மாவட்ட மக்கள் மன்ற நிர்வாகிகளும் ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அது போல் திண்டுக்கல் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அடித்து ஒட்டியுள்ள போஸ்டரில் தம்புராஜ் படத்தை போடாமல் மாவட்ட தலைவர் எஸ்.டி.பாணி மற்றும் மாவட்ட செயலாளர் ரகு படத்தை மட்டும் போட்டு அடித்து ஒட்டி இருக்கிறார்கள்.
இப்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்றத்திலும் கோஷ்டி பூசல் எதிரொலியாக தனி தனி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருப்பது மாவட்டத்தில் உள்ள ரஜினி மக்கள் மன்ற ரசிகர்கள் மத்தியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. இன்னும் ரஜினி கட்சி ஆரம்பித்து செயல்படவே இல்லை அதற்குள் மற்ற அரசியல் கட்சிகள் போல் ரஜினி மக்கள் மன்றத்திலும் காலா படம் மூலம் கோஷ்டி பூசல் வெடித்து விட்டது என்பது தான் உண்மை.