திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், குற்றச் சம்பவங்கள் ஏதும் நடைபெறா வண்ணம் முன்னெச்சரிக்கைத் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், வாகன தணிக்கை செய்து குற்றவாளிகள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு அறிவுரைகள் வழங்கியுள்ளார்.
இந்நிலையில், கடந்த 23.03.22-ந் தேதி செந்தண்ணிர்புரம், முத்துமணிடவுன், ஆஞ்சநேயர்கோவில் அருகில் பெட்டிகடை உரிமையாளரிடம் கத்தியைக் காட்டி ரூ.1100 பறித்துச் சென்றதாக பெறப்பட்ட புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து, வழக்கில் சம்மந்தப்பட்ட தினேஷ்குமார் (எ) குண்டுமணி (27), அய்யப்ப மணிகண்டன் (27), ஆகியோரைக் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். மேலும் தினேஷ்குமார் (எ) குண்டுமணி மீது பல்வேறு காவல் நிலையங்களில் 9 வழக்குகளும், அய்யப்ப மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் 4 வழக்குகளும் நிலுவையில் இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
மேலும் தினேஷ்குமார் (எ) குண்டுமணி மற்றும் அய்யப்ப மணிகண்டன் ஆகியோர் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி பணம் பறிப்பவர்கள் என விசாரணையில் தெரியவந்தது. மேலும், மேற்கண்ட இருவரும் தொடர் குற்ற நடவடிக்கையில் ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினைப் பரிசீலனை செய்து, திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், இரண்டு பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருக்கும் இருவருக்கும் குண்டர் தடுப்புச் சட்டம் ஆணை சார்வு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.