
ராக்கெட் ராஜா மீதான குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
நெல்லையை சேர்ந்த ராக்கெட் ராஜா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "சென்னை தேனாம்பேட்டை போலீசார் கடந்த மே 9ஆம் தேதி என்னை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். என்னை சிறையில் அடைத்ததை எனது நெருங்கிய உறவினர்களிடம் தெரிவிக்கவில்லை. இந்நிலையில் என்னை கோயம்புத்தூர் மத்திய சிறைக்கு மாற்றம் செய்தனர்.
இந்த நிலையில் ஜூன் 9ஆம் தேதி என் மீது குண்டாஸ் வழக்கு பதிந்தனர். முறையாக ஆவணங்கள் இன்றி விதிமுறைகள் பின்பற்றாமல் என்மீது குண்டாஸ் வழக்கு பதிந்து நெல்லை காவல்துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார். குண்டாஸ் வழக்கு பதிவு தொடர்பாக சிறை அதிகாரிகளுக்கு அறிவிக்கபடவில்லை. முறையாக விதிமுறைகள் பின்பற்றாமல் என்மீது பதிவு செய்யபட்ட குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு இன்று நீதிபதி செல்வம், பஷீர் அகமது அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ராக்கெட் ராஜா மீது பதிந்த குண்டாஸ் உத்தரவில் ஏற்பட்ட காலதாமத்தை கருத்தில் கொண்டு ராக்கெட் ராஜா மீதான குண்டாஸ் உத்தரவை ரத்து செய்து நெல்லை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட்டனர்.