காஞ்சிபுரம் மாவட்டம் திம்மசமுத்திரம் ஊராட்சிக்கு அருகே உள்ள ஜினகாஞ்சி நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்குமார். இவர் அப்துல்லாபுரம் மின்சாரத்துறை போர்மேனாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவியான கல்பனா அப்பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
இந்நிலையில், கடந்த 25 ஆம் தேதியன்று அருள்குமார் தன் குடும்பத்துடன் சொந்த ஊரான ஆரணிக்கு குலதெய்வக் கோவிலுக்குச் சென்றுள்ளார். மேலும், அவர் வீட்டை விட்டுச் செல்லும்போது வெளியே இருந்த விளக்குகளை போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதையடுத்து, சொந்த ஊரில் தனது உறவினர்களுடன் மூன்று நாட்கள் தங்கியிருந்த அருள்குமார், கடந்த 29 ஆம் தேதியன்று வீடு திரும்பியுள்ளார்.
அந்த சமயம், வீட்டுக்கு வெளியே போடப்பட்டிருந்த விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன. வீட்டின் முன் கேட்டில் இருந்த பூட்டுகள் உடைக்கப்பட்டு திறந்த நிலையில் இருந்துள்ளது. ஒருகணம் இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அருள்குமார், உடனடியாக வீட்டுக்குள் ஓடிச் சென்று பார்த்துள்ளார். அப்போது, வீட்டிலிருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதிலிருந்த சுமார் 5 சவரன் தங்க நகை மற்றும் 120 கிராம் வெள்ளி பொருட்கள் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதனால் அதிர்ந்துபோன அருள்குமார், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்திருந்த நேரத்தில், பக்கத்து வீட்டிலும் ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது, பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மாரியப்பன் என்பவரின் வீட்டிலும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகளும் ஒரு லட்ச ரூபாய் ரொக்கப் பணமும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இரு வீட்டாரும் இந்த கொள்ளை சம்பவம் குறித்து பாலுசெட்டிசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், விசாரணையை தொடங்கிய காவல்துறை அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமெராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது, பட்டா கத்தியுடன் ஒரே பைக்கில் வந்த இரண்டு இளைஞர்கள் இந்த கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை வலைவீசித் தேடி வருகின்றனர். அதே சமயம், ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரண்டு வீடுகளில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.