விழுப்புரம் மாவட்டம் மயிலம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட கிராமம் ஜக்காம்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் சித்திரகுமாரி (48 வயது). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு அரசுப் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு தனது தாய், மகள் மற்றும் மகன் ஆகியோருடன் தூங்கிக் கொண்டிருந்தபோது விடியற்காலை நேரத்தில் வீட்டின் பின்பக்க கதவை உடைத்துக் கொண்டு மூன்று மர்ம நபர்கள் உள்ளே நுழைந்தனர். அவர்களின் நடமாட்ட சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் எழுந்து கொண்டனர். அப்போது மர்ம நபர்கள், சித்திரகுமாரி அவரது மகள் ஆகியோர் அணிந்திருந்த நகைகளைக் கழட்டிக் கொடுக்குமாறு மிரட்டியுள்ளனர். மேலும் கழுத்தில் இருந்த நகைகளை வலுக்கட்டாயமாகப் பறித்தனர். இதைக் கண்டு அவர்கள் அனைவரும் கூச்சலிட்டு உள்ளனர். இவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வீடுகளில் இருந்து வெளியே வந்துள்ளனர். உடனே கொள்ளையர்கள் நகைகளுடன் தப்பி ஓடினர்.
இச்சம்பவம் குறித்து உடனடியாக மயிலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். மயிலம் போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். கொள்ளைச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் மற்றும் தடய அறிவியல் துறையினர் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் மயிலம் பகுதி கிராம மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.