சேலத்தில் உள்ள முத்ரா ஜூவல்லர்ஸ் என்ற நகைக்கடையில் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்கலாம் என பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
சேலம் அம்மாபேட்டை, ஆட்டையாம்பட்டியில் முத்ரா ஜூவல்லர்ஸ், எஸ்எம் கோல்டு ஆகிய பெயரில் நகைக்கடை இயங்கி வந்துள்ளது. இந்த கடையில், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தென்னை மரத்துப்பாளையத்தைச் சேர்ந்த விஜயகுமார் (52) என்பவர், 31.10 லட்சம் ரூபாய் முதலீடு செய்திருந்ததாகவும், பழைய தங்க நகைகளுக்கு புதிய நகைகள் தருவதாகவும் சொன்னதன்பேரில், 'பழசுக்கு புதுசு ஐஸ்வர்ய தங்க மழை' என்ற திட்டத்தின் கீழ், 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தன்னுடைய பழைய தங்க நகைகளை கொடுத்து இருந்ததாகவும் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நகைக்கடை உரிமையாளர்கள் முருகவேல், அவருடைய மனைவி கலைவாணி ஆகியோர் பணமோ, நகையோ வழங்கவில்லை. திடீரென்று அவர்கள் கடையைப் பூட்டிவிட்டு தலைமறைவாகி விட்டனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்துவருகிறது. இந்த நகைக் கடையில் மேலும் பலர் பணம் டெபாசிட் செய்திருப்பதும், புதிய நகைகள் பெறும் பொருட்டு பழைய நகைகளை பலர் கொடுத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
இந்த நகைக்கடையால் ஏமாற்றப்பட்ட முதலீட்டாளர்கள், முதலீடு செய்ததற்கான ஆதாரங்கள், அடையாள ஆவணங்களுடன் சேலம் வெண்ணங்குடி முனியப்பன் கோயில் அருகே உள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல்நிலையத்தில் புகார் அளிக்கலாம். இவ்வாறு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.