கோகுல்ராஜ் ஆணவக்கொலை வழக்கின் சாட்சிகள் மீதான விசாரணையை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச்.இளவழகன் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி கோகுல்ராஜ் கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 24ம் தேதி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே கிழக்கு தொட்டிபாளையத்தில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
காவல்துறையினர் விசாரணையில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த கோகுல்ராஜூம், கொங்கு வெள்ளாளர் கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண்ணும் காதலித்ததால், அவரை திட்டமிட்டு ஆணவக்கொலை செய்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை கவுண்டர் பேரவை நிறுவனர் எஸ்.யுவராஜ், அவருடைய சகோதரர் தங்கதுரை, அருள்செந்தில், செல்வக்குமார், குமார் சிவக்குமார், கார் ஓட்டுநர் அருண், சங்கர், செல்வராஜ், ஜோதிமணி, ரவி என்கிற ஸ்ரீதர், ரஞ்சித், சதீஸ்குமார், சுரேஷ், பிரபு, கிரி, அமுதரசு, சந்திரசேகர் ஆகிய 17 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த வழக்கில் சாட்சிகள் மீதான விசாரணை நாமக்கல் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆகஸ்ட் 30, 2018ம் தேதி தொடங்கியது. மொத்தம் 110 பேர் அரசுத்தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கோகுல்ராஜ் தரப்பில் ஆஜராகி வாதாட சேலத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பி.கருணாநிதியை தமிழக அரசு நியமித்துள்ளது. முதல் நாளன்று கோகுல்ராஜின் தாய் சித்ராவிடம் வழக்கறிஞர் கருணாநிதி விசாரணை நடத்தினார். நீதிபதி கே.ஹெச்.இள-வழகன் முன்னிலையில் விசாரணை நடந்தது.
அன்றைய தினம், சம்பவத்தன்று கோகுல்ராஜ் கடைசியாக வீட்டில் இருந்து கிளம்பும்போது அணிந்து சென்ற பேண்ட், சட்டை, உள்ளாடைகளை அவருடைய தாய் சித்ரா அடையாளம் காட்டினார். அந்த உடைகளைப் பார்த்து அவர் மார்பில் அடித்துக்கொண்டு கண்ணீர் விட்டு கதறி அழுததால் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை. இதையடுத்து சாட்சிகள் விசாரணையை செப்., 1ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
அதன்படி, சாட்சிகள் விசாரணை இரண்டாம் நாளாக இன்று (செப்டம்பர் 1, 2018) நடந்தது. இன்று பகல் 12 மணியளவில் விசாரணை தொடங்கியது. கோகுல்ராஜ் தாய் சித்ராவிடம் இன்று யுவராஜ் தரப்பில் ஆஜரான மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுமண ராஜூ குறுக்கு விசாரணை நடத்தினார்.
முன்னதாக சித்ரா தரப்பில், சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் நாராயணன் என்பவர் தன்னை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞருக்கு உதவியாக ஆஜராக அனுமதிக்கக் கோரி மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவை பரிசீலித்த நீதிபதி கே.ஹெச்.இளவழகன், 'இந்த வழக்கில் சித்ரா தரப்பில் தனியாக ஆஜராகி வாதாட முடியாது. அரசு நியமித்திருக்கும் வழக்கில் அவருக்கு உதவியாக ஆஜராகலாம் என்றார். இந்த மனு மீதான முடிவு என்ன என்பது குறித்து நீதிமன்ற இணையதளத்தில் வெளியிடப்படும்,' என்றார்.
குறுக்கு விசாரணையின்போது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ண லட்சுணராஜூ கேட்ட பல கேள்விகளுக்கு சித்ரா முன்னுக்குப் பின் முரணாண பதில்களைச் சொன்னார். கடந்த 2015ம் ஆண்டு ஜூன் 23ம் தேதி கடைசியாக வீட்டில் இருந்து கிளம்பும்முன் கோகுல்ராஜ் உங்களிடம் என்ன சொல்லிவிட்டுச் சென்றார் என்ற கேள்விக்கு சித்ரா, கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றார் என்றும், மற்றொருமுறை நண்பர்களைச் சந்தித்துவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிச் சென்றார் என்றும் மாற்றி மாற்றி கூறினார்.
மேலும் சில கேள்விகளுக்கு ஆம், இல்லை என்ற பாணியில் பதில் அளிக்கும்படி யுவராஜ் தரப்பு வழக்கறிஞர் கூற, அதற்கு நீண்ட விளக்கம் அளிக்க சித்ரா முயன்றார். அதற்கு நீதிபதி குறுக்கிட்டு, ஏற்கனவே நீங்கள் விளக்கமான பதில் சொல்லி விட்டீர்கள். இப்போது கேட்கப்படும் கேள்விகளுக்கு ஆம், இல்லை என்று சொன்னால் மட்டும் போதுமானது என்றார். பிறகு சித்ரா சொன்ன சில பதில்கள்¢ நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
இதையடுத்து இன்றைய குறுக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. சாட்சிகள் மீதான அடுத்தக்கட்ட விசாரணை செப்டம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி கே.ஹெச். இளவழகன் உத்தரவிட்டார். அன்றைய தினம் இரண்டாவது சாட்சியான கோகுல்ராஜின் தோழி சுவாதி, மூன்றாவது சாட்சியான கோகுல்ராஜின் சகோதரர் கலைச்செல்வம் ஆகியோரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்பட உள்ளது.