பிரதமர் மோடி தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரத்திற்காக பல சுற்றுப்பயண நிகழ்ச்சிகள் வைத்துள்ளார். சென்ற மாதம் தமிழக பா.ஜ.க.சார்பில் மதுரையில் முதல் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு தேர்தல் பரப்புரை நிகழ்த்தினார் மோடி. அடுத்தது இரண்டாவதாக கொங்கு மண்டலத்தில் பா.ஜ.க. சார்பில் திருப்பூரில் தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் வருகிற 10 ந் தேதி நடக்கிறது. இந்த கூட்டத்திலும் பிரதமர் மோடி மக்களிடம் பா.ஜ.க.வுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்யவுள்ளார். இதற்காக திருப்பூர் அருகே உள்ள பெருமாநல்லூர் -செங்கப்பள்ளி ஆசிய ஊர்களுக்கு இடையே உள்ள தேசிய நெடுஞ்சாலையையொட்டி பா.ஜ.க.வினர் பொதுக்கூட்ட மேடை அமைத்து வருகிறார்கள்.
ஏற்கனவே மதுரையில் பிரதமர் மோடி தமிழக வருகையை கண்டித்து ம.தி.மு.க.உட்பட அரசியல் கட்சிகள் மற்றும் தமிழ் அமைப்புகள் மோடியே திரும்பிப் போ என கருப்பு கொடி போராட்டமும் Go Back Modi என்று எழுதப்பட்ட கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பு போராட்டம் நடத்தினார்கள். அந்த வரிசையில் திருப்பூரிலும் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி போராட்டம் திட்டமிட்டபடி திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் 10ந் தேதி காலை 11 மணி முதல் மாலை 4 வரை நடக்கும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
அவர்கள் இப்போராட்டம் பற்றி கூறுகையில், "முற்பட்ட சமூகத்திற்கு பொருளாதார ரீதியாக பத்து சதவீதம் இட ஒதுக்கீடு செய்தது சமூக நீதிக்கு பா.ஜ.க.மோடி அரசு அநீதி இழைத்துள்ளது. அதே போல் பின்னலாடை தொழில் நகரமான திருப்பூரை அதன் தொழிலான ஜவுளியை புதிய பொருளாதார மற்றும் புதிய தொழில் கொள்கைகளால் மிகப் பெரிய நசிவை மோடி அரசு ஏற்படுத்திவிட்டது. அதற்காகத்தான் தமிழ் நாட்டுக்கு துரோகம் இழைக்கும் மோடியே தமிழகம் வராதே திரும்பிப் போ என்று மோடிக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறோம். எத்தனை தடைகள் வந்தாலும் திட்டமிட்டபடி மோடிக்கு கருப்புக்கொடி எதிர்ப்பு உண்டு என்றனர்.