உலகில் 100 கோடிக்கு மேல் உள்ள ஏசி பிரிட்ஜ்களில் ஓசோன் உருவாகாத வகையில் பசுமை வாயு நிரப்ப முன்வர வேண்டும் என்று பிரபஞ்ச தெய்வீகப் பேராற்றல் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் பேசினார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அன்னை தெரசா மெட்ரிக் பள்ளியில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநாடு நடைபெற்றது. இம் மாநாட்டில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பல்வேறு அறிவியல் படைப்புகளை தயார் செய்து பார்வைக்கு வைத்திருந்தனர். பிரபஞ்ச தெய்வீக பேராற்றல் பவுண்டேஷன் நிறுவனர் முத்துக்குமரன் மாணவர்களின் அறிவியல் படைப்புகளை பார்வையிட்டு பின்னர் பேசியதாவது
"இன்றைக்கு நாட்டுக்குத் தேவையான பல்வேறு அறிவியல் படைப்புகளை பள்ளி மாணவர்கள் படைத்து தங்களது திறமைகளை வெளிப்படுத்துவது மிகவும் பாராட்டுக்குரியது. அதே நேரத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை பாதிக்காத வகையில் அறிவியல் படைப்புகளை படைக்க முன் வரவேண்டும். உலகம் முழுவதும் 100 கோடிக்கு மேல் மக்கள் பயன்பாட்டில் உள்ள ஏசி, பிரிட்ஜ்களில் உருவாகும் சி.எப்.சி வாயுவிற்கு பதிலாக ஓசோனை கெடுக்காத பசுமை வாயுவை மாணவர் சமுதாயம் கண்டுபிடிக்க வேண்டும். அதை உலக நாடுகள் அரசு ஆணையுடன் மாற்ற முன்வர வேண்டும்.
பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால் சூரிய கதிர்கள் பூமி மீது படுவதால் உண்டாகும் வெப்பம், வெளியேறாமல் காற்று மண்டலத்தின் கீழ்ப் பகுதியிலேயே தங்கிவிடும். இதைத்தான் பசுமை இல்ல விளைவு என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
க்ளோரோ புளோரோ கார்பன்கள் மற்றும் வாகன வெளியேற்றும் புகை மாசுவை அதிகரிக்கச் செய்கின்றது. உலகம் வெப்பமயமாதல் என்று அறிவியல் ரீதியாக குறிப்பிடுகிறோம். மாணவர் சமுதாயம் புதிய கண்டுபிடிப்புகளை படைக்க வேண்டும் மற்றும் மரங்கள் நட்டு பல கோடி ஆண்டுகள் பூமியில் உயிரினங்கள் நலமுடன் வாழ வழிவகுக்க வேண்டும் என்று பேசினார்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநில செயலர் ஸ்டீபன் நாதன், மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், அறிவியல் ஆசிரியர் செங்குட்டுவன், மாவட்ட தலைவர் பழனியப்பன் ,பாலு ஆகியோர் கலந்து கொண்டு, சிறந்த அறிவியல் படைப்புகளை படைத்த மாணாக்கர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினர். முன்னதாக மாவட்ட செயலாளர் சதீஷ் வரவேற்றார். இறுதியில் பள்ளி முதல்வர் தனலட்சுமி நன்றி கூறினார்.