சென்னை கீழ்ப்பாக்கத்தில் கல்லூரி மாணவர்கள் அரசுப் பேருந்தில் பயணித்த போது ஏற்பட்ட மோதலில் பேருந்து உடைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாகப் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் 59 என்ற எண் கொண்ட பேருந்து பயணிகளை வழக்கம்போல் ஏற்றிக்கொண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தது. அப்பொழுது கல்லூரி மாணவர்கள் பேருந்தில் ஏறி உள்ளனர். அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்குள் அதே கல்லூரியைச் சேர்ந்த சில மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் வேகமாக பேருந்தை பின் தொடர்ந்து வந்துள்ளனர்.
இருசக்கர வாகனத்தில் வந்த மாணவர்கள் பேருந்தில் உள்ள மாணவர்களைக் கீழே இறங்கும்படி கூச்சலிட்டுள்ளனர். பேருந்து நிறுத்தப்படாத நிலையில், கருங்கற்களை எடுத்து கல்லூரி மாணவர்கள் பேருந்தின் பின்புறத்தை நோக்கி எரிந்துள்ளனர். இதில் பேருந்தின் பின்பக்க கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணித்த பெண் பயணி ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது.
உடனடியாக பேருந்து ஓட்டுநர் உமாபதி சேத்துப்பட்டு காவல் நிலையம் அருகில் பேருந்தை நிறுத்தினார். உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கல்லூரி மாணவர்கள் மோதலில் மாநகர் பேருந்து கண்ணாடி உடைக்கப்பட்ட சம்பவம் சென்னை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.