பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சிகளின் நோக்கம்; ஆனால் அந்த கட்சிகளுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை என்று தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.,தற்காப்பு கலையான கராத்தே கலை தீவிரமாக மாணவர்கள் மத்தியில் பரவி வருவது வரவேற்கத்தக்கது.
கராத்தே பயிற்சி ஊக்கத்தொகையை தமிழக அரசு, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுக்கு மூன்று மாதம் மட்டுமே வழங்கி வருகிறது. இதனை ஆண்டுக்கு 10 மாதமாக உயர்த்தி வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் மாணவிகள் தற்காப்பு கலையில் சிறந்து விளக்க முடியும். தங்களை தற்காத்துக் கொள்ள முடியும்.
ஈரோடு -பவானி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஐஆர்டிடி பொறியியல் கல்லூரியில் சர்வதேச விளையாட்டு பயிற்சியும் ஒருங்கிணைந்த மைதானம் அமைக்க வேண்டும். படிக்கும் மாணவர்களுக்கு உடற்பயிற்சி அவசியம் என்பதை உணர்ந்து அரசு வாரத்தில் மூன்று நாட்கள் விளையாட்டு வகுப்புகள் வைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் மன அழுத்தம் குறைந்துது செல்போனில் மூழ்குவதில் மாற்றம் ஏற்படும். கராத்தே, சிலம்பம் போன்ற விளையாட்டுகளில் அரசு, தனியார் வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும்.
விமானங்களில் பயணங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் விமானங்களில் குடித்து விட்டு பயணம் செய்பவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்ம விபூசண் விருது பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாழ்த்துகள். விஜயகாந்த்துக்கு இந்த விருது கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. தொலைக்காட்சி செய்தியாளர்களை மிரட்டுவது, தாக்குவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இதனால் தமிழக அரசு மீண்டும் இதுபோன்ற செயல் நிகழாமல் தடுக்க வேண்டும். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அவசர கதியில் திறக்கப்பட்டது, இதனை பயணிகள் வசதிக்காக முறைப்படுத்த வேண்டும்.
மேகதாது அணைக்கு ஒருபோதும் மத்திய அரசு அனுமதி வழங்கக் கூடாது, இதற்கு தமிழக அரசு ஒருபோதும் துணை போகக் கூடாது. கூட்டணி குறித்து உரிய நேரத்தில் த.மா.கா அறிவிக்கும். தற்போது மக்கள் சந்திப்பு அதிகரித்து வருகிறது. தொடர்ந்து இளைஞரணி, மாணவரணியினரை சந்தித்து வருகிறோம். தொடர்ந்து பிப்ரவரி 3ஆம் தேதி அனைத்து அணிகள் செயல்வீரர்கள் கூட்டம் நடக்க உள்ளது. இறுதியாக பிப்ரவரி மாதம் இறுதியில் செயற்குழு கூடி மக்கள் எண்ணைத்தைப் பிரதிபலிக்கும் வகையில் முடிவு அறிவிக்க வேண்டும்.
திமுக கூட்டணியை வெல்லும் வகையில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெறும். கூட்டணியைப் பொறுத்தவரை அவரவர் சார்ந்த குழுக்கள் உள்ளதால்., அதற்கேற்ப செயல்படுவார்கள். முதல் நாளில் இருந்து இந்திய கூட்டணி முரண்பாட்டின் மொத்த உருவமாக, வடிவமாக உள்ளது. அதில் உள்ள தலைவர்கள் உதட்டு அளவில் தான் பேசி வருகிறார்கள். ஆனால் உள்ளத்தில் இருந்து பேசவில்லை. அவர்கள் நோக்கம் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று தான் உள்ளது. ஆனால் அதில் உள்ள கட்சிகளுக்கு காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இல்லை என்று மாநில கட்சிகள் சொல்கிறார்கள். பீகார் மாநிலம் முதல்வர் நிதிஷ்குமார் அனுபவமிக்க மூத்த தலைவர். இந்த நிலையில் மாநில மக்களின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் நிதிஷ்குமார் முடிவை எடுத்துள்ளார்.
இந்தியா ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். அதனால் நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதற்கு எந்த தடையும் இல்லை என்பது தான் எனது கருத்து. பொதுவாக இந்திய அளவில் பாஜக பிரகாசமாக செயல்பட்டு வருகிறது. திமுக இளைஞர் அணி மாநாடு பணபலம், விளம்பரத்திற்கு எடுத்துகாட்டாக அமைந்துள்ளது. தமிழகத்தில் பாஜக கூட்டணி முடிவு செய்வது என்பது மத்தியில் உள்ள தலைவராக தான் இருக்கும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் உள்ள அரசு திமுக தான். மக்கள் அவர்களுக்கு எதிரான மனநிலையில் இருக்கிறார்கள். நிச்சயம் இது பாராளுமன்ற தேர்தலில் எதிரொலிக்கும்” என்றார்.