தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, த.மா.கா., சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், திங்கள்கிழமை (செப். 19) ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் உலகநம்பி, வழக்கறிஞர் செல்வம், சுசீந்திரகுமார் ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநிலத் தலைவர் ஜி.கே.வாசன் எம்.பி., கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “தமிழக அரசு, மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மாதந்தோறும் மின் பயன்பாடு அளவீடு நடத்தப்படும் என தேர்தல் வாக்குறுதி கொடுத்துவிட்டு, அதை செயல்படுத்தாமல் வரலாறு காணாத வகையில் மின் கட்டணத்தை உயர்த்தி இருப்பது வேதனையாக உள்ளது.
கடந்த ஆட்சியின்போது சொத்து வரி உயர்த்தப்பட்டதற்கு தீவிர போராட்டம் நடத்திய திமுக, தற்போது ஆளுங்கட்சியே சொத்து வரியை உயர்த்தி இரட்டை வேடம் போடுவது கண்டிக்கத்தக்கது. மக்கள் நலனில் அக்கறை இல்லாத, வெளிப்படைத் தன்மை இல்லாத அரசாக இந்த ஆட்சி உள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளனர். அந்தளவுக்கு தமிழகத்தில் போதைப் பொருள்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. போதைப் பொருள்கள் விற்பனையில் நாட்டிலேயே தமிழ்நாடு முதல் இடம் பிடித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய இந்த அரசு தவறி விட்டது. தமிழகத்தில் பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதோடு, சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் கற்பிப்பார்கள். வளர்ந்த நாடுகள் கொரோனாவின் தாக்கத்தால் நலிவடைகிறது. ஆனால் 140 கோடி மக்களைக் கொண்ட இந்தியா வளர்ச்சிப் பாதையில் இருக்கிறது. அதற்குக் காரணம், மத்திய அரசு அனைத்துத் துறைகளிலும் நல்லமுறையில் செயல்படுவதே ஆகும். பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலை குறைய வாய்ப்பு உள்ளது. ராகுல் காந்தியின் நடைப்பயணத்தால் மக்களுக்கு எந்தப் பலனும் இல்லை.” இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.