அரசுப் பள்ளிகளில் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பைத் தமிழக அரசு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்த நிலையில் இந்த திட்டம் இன்று தொடங்கப்பட்டு உள்ளது. மாதிரி பள்ளிகள் மற்றும் சீர்மிகு பள்ளிகள் துவக்க விழாவில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் இணைந்து தமிழக முதல்வர் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். இதன் மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பலனடைய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் "இந்திய நாட்டின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ராதாகிருஷ்ணன் மற்றும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் பிறந்தநாளின் போது மூவலூர் ராமாமிர்தம் அம்மையாரின் நினைவு உயர்கல்வித் திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 15 மாதிரிப் பள்ளிகள் 26 தகைசால் பள்ளிகள் இன்று துவக்கி வைக்கப்பட்டுள்ளன. எனது வாழ்வில் மகிழ்ச்சிக்குரிய மகத்தான நாள் இன்று.
பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு கல்லூரிகள் மீது இருக்கும் தயக்கத்தை உடைக்கவே இந்த புதுமைப்பெண் திட்டம். இலவச அரசு பேருந்து திட்டத்தின் மூலம் மாதம் 600ல் இருந்து 1200 ரூபாய் வரை மிச்சமாவதாக பெண்கள் சொல்கிறார்கள். இதனால் அரசுக்கு எவ்வளவு இழப்பு என நான் கூறமாட்டேன். இதன் மூலம் எத்தனை லட்சம் பெண்கள் சிறப்படைகிறார்கள் என்பது தான் நமது லட்சியம். அந்த வகையில் அது ஒரு முதலீடு தான்.
1000 ரூபாய் வழங்குவதை அரசு இலவசம் என கருதவில்லை. அதை அரசு தனது கடமையாக கருதுகிறது." என கூறியுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு பள்ளியிலும் அடுத்து வரும் நான்கு ஆண்டுகளில் 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.
இந்நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மாணவிகளுக்கு பணம் எடுப்பதற்குண்டான ஏடிஎம் அட்டைகளையும் வழங்கினார். சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் நடந்த இந்த விழாவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் உடனிருந்தனர் .