அண்மையில் தமிழக அரசு பொங்கல் பரிசு தொடர்பாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 1000 ரூபாய் ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சை அரிசி மற்றும் சர்க்கரை வழங்க தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். ஜனவரி 2-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுவர். இதனால் 2356.67 கோடி ரூபாய் செலவு ஏற்படும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தமுறை பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாதது கரும்பு பயிரிட்ட விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் பொங்கல் தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட வேண்டும். அதேபோல் பொங்கல் பரிசுத் தொகையானது ஐந்தாயிரம் ரூபாய் என உயர்த்தி வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன. இந்தநிலையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''பொங்கல் பண்டிகையை கொண்டாட தமிழக அரசு அறிவித்திருக்கும் பரிசு தொகுப்பில் கரும்பு சேர்க்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது. பொங்கல் பரிசுத் தொகையுடன் கரும்பையும் சேர்த்து வணங்கினால் விவசாயிகள் பயனடைவார்கள். பரிசுத்தொகையை குறைந்தபட்சம் 2,500 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்'' என வலியுறுத்தியுள்ளார்.