இளையராஜாவுக்கு எம்.பி பதவி கொடுத்து அடக்கி விட வேண்டாம், பாரத ரத்னா கொடுக்க வேண்டும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார்.
'மோடியும் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் வெளியாகியுள்ள புத்தகத்தில் இசையமைப்பாளர் இளையராஜா மோடி குறித்து தெரிவித்திருந்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதில் மோடியும் அம்பேத்கரும் ஒரே பாதையில் பயணிக்கிறார்கள் என்ற தொனியில் இளையராஜா இருவரையும் சரிக்கு சரியாக பேசியது அம்பேத்கர் ஆதரவாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதுதொடர்பாக இளையராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தரப்பினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் தங்கள் கருத்துக்களை தொடர்ந்து ஊடகங்களில் தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, " இளையராஜா தெரிவித்துள்ள கருத்தில் எந்த தவறும் இல்லை. இளையராஜா ஒரு நடுநிலையானவர், அவர் பா.ஜ.கவை சேர்ந்தவர் இல்லை. குடியரசுத்தலைவர் தேர்ந்தெடுக்கும் நியமன உறுப்பினருக்கும் பாஜகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அதில் நாங்கள் தடையிட விரும்பியதும் இல்லை. என்னுடைய கருத்து, இளையராஜாவை எம்.பி ஆக்கி அடக்கிவிட வேண்டாம், பாரத ரத்னா கொடுத்து கௌரவிக்க வேண்டும். இதுதொடர்பாக தேவை ஏற்பட்டால் மத்திய பா.ஜ.கவுக்கு கடிதம் எழுதுவேன்" என்று கூறியுள்ளார்.