செங்கல்பட்டு மாவட்டம் சித்திரவாடி பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கிருத்திகா. இவர் அரசுப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டு இருந்த போது சேதம் அடைந்து இருந்த மின்கம்பம் முறிந்து சிறுமியின் மீது விழுந்தது. படுகாயம் அடைந்த சிறுமியை சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருப்பினும் கிருத்திகா சிகிச்சை பலனின்றி கடந்த 14ம் தேதி உயிரிழந்தார். இதன் பின் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சித்திரவாடி பகுதியில் உள்ள மயானத்தில் புதைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன்தினம் மயானத்தில் தலைமுடி மற்றும் பூஜைக்கு உபயோகிக்கும் பொருட்கள் மற்றும் இதர சில பொருட்கள் இருந்ததால் அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதன் பின் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த மதுராந்தகம் போலீசார் சிறுமி புதைக்கப்பட்டு இருந்த இடத்தைத் தோண்டி உடலை எடுத்தனர். உடலில் சிறுமியின் தலை வெட்டப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமியின் உறவினர் கூறுகையில், “சிறுமியின் உடல் தோண்டப்பட்டு இருக்கிறது என யாரோ ஒருவர் சொல்லி இருக்கிறார். குழந்தையின் பெரியப்பா இங்கு வந்து பார்த்த பொழுது முடி எல்லாம் மேலே இருந்துள்ளது. நாங்கள், குழந்தையின் பெற்றோர் என அனைவரும் வந்து பார்த்தோம். இங்கு முடி, டார்ச் லைட், மாஸ்க் போன்றவை உள்ளது. அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல்களைக் கொடுத்தோம். தோண்டி எடுத்துப் பார்த்தால் குழந்தையின் தலை இல்லை” எனக் கூறினார்.
நேற்று முன்தினம் அமாவாசை என்பதால் மாந்திரீகத்துக்காக யாரும் எடுத்துச் சென்றார்களா எனக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.