‘பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்
எட்டு மறிவினினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி’
-பாரதியாரின் இக்கனவை நனவாக்கும் விதத்தில் 110 ஆண்டுகளுக்கு முன்பே, விருதுநகர் மாவட்டத்தின் அந்த முக்கிய ஊரில் முழுக்க முழுக்கப் பெண்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்ட பள்ளி அது. அதன் நிர்வாகத்தில், ஒரே வளாகத்தில் இயங்கும் பெண்களுக்கான பள்ளிகளில், சுமார் 8000 மாணவிகள் படித்து வருகின்றனர்.
இத்தனை சிறப்புகள் இருந்தும், தற்போதைய நிர்வாகிகளின் சுயநலப் போக்கால், அந்தப் பள்ளியை விமர்சித்து வலைத்தளங்களில் ஏதேதோ பதிவிட்டு வருகின்றனர். ஆசிரியர் பணி நியமனத்துக்கு தனிப்பட்ட முறையில் லட்சக்கணக்கில் கையூட்டு, கல்வித்துறை அதிகாரிகளுக்கும் அந்தப் பணத்தில் பங்கு, அதிலும் விதிமீறல் நியமனங்கள் என்றால், மிகமிக அதிகமாக பணம் கறப்பது, ஆசிரியர் நிதி என்ற பெயரில் வசூலித்த பணத்தை ஒட்டுமொத்தமாகச் சுருட்டியது என அடுக்கிக்கொண்டே போகின்றன அப்பதிவுகள். இதில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருப்பவர்கள், அப்பள்ளியின் செயலாளரும், இளநிலை உதவியாளரான ஒரு பெண்ணும்தான்.
இதில் கடுமையான குற்றச்சாட்டு என்னவென்றால், தினமும் பள்ளி அல்லாத நேரத்தில், இரவு 8-30 மணிக்கு மேல், தலைமை ஆசிரியர் இல்லாமல், செயலாளரும் அந்தப் பெண் உதவியாளரும் பள்ளி மாணவிகளின் விடுதிக்குச் சென்று, மாணவிகள் மற்றும் இளம் ஆசிரியைகளிடம் தவறான நோக்கத்துடன், தேவையற்ற பேச்சுகள் பேசி, செயலாளர் ஆசைக்கு இணங்கச் செய்கிறார்கள் என்பதுதான்.
இதுகுறித்து அந்தப் பள்ளியின் நலனில் மிகவும் அக்கறை கொண்ட தலைமைப் பொறுப்பில் இருந்த பெண் ஒருவரிடம் பேசினோம்.
“நூற்றாண்டு கடந்த பள்ளியில் நடக்கின்ற மோசமான விஷயங்கள் வலைத்தளங்களில் பரவுவது வேதனையளிக்கிறது. பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கின்றனர். இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி குற்றச் செயலில் யாரேனும் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவிகளின் விடுதிக்குள் செயலாளர் சென்றார் என்ற தகவல் என்னை நடுங்க வைத்துவிட்டது. இந்தக் குற்றச்சாட்டில் எந்த அளவுக்கு உண்மை இருக்குமென்று தெரியவில்லை. மாணவிகள் சம்பந்தப்பட்ட விஷயம் என்பதால், மிகவும் எச்சரிக்கையுடன் இதனைக் கையாள வேண்டும்.” என்றார்.
அந்தப் பெண் உதவியாளரை ‘சகலகலாவில்லி’ எனச் சொல்லிவிட்டு, பள்ளியைத் தாண்டி கல்வித்துறை மேலிடம் வரையிலும் நெருக்கம் வைத்திருப்பதால், யாராலும் சகிக்க முடியாத அளவுக்கு ஆட்டம் போடுகிறார் எனக் குமுறி வெடிக்கிறார்கள், அந்தப் பள்ளி வட்டாரத்தில். கைபேசியில் அவரைத் தொடர்புகொண்டபோது, அவருடைய உறவுதான் ‘அட்டென்ட்’ பண்ணியது. “எதுவும் பிரச்சனையா? அவங்களே பேசுவாங்க..” என்று சொன்னது. ஆனால், அந்தப் பெண் உதவியாளர் நம்மைத் தொடர்புகொள்ளவே இல்லை.
அந்தப் பள்ளியின் செயலாளரிடம் பேச முடிந்தது. “எங்கள் இருவர் மீதான குற்றச்சாட்டுகள் அத்தனையுமே தவறானது.” என்று மறுத்த அவர், உள்ளூர் தொழிலதிபர் ஒருவர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சுபாஷினியிடம் பேசினோம். “அந்த ஸ்கூல் நிர்வாகத்துக்குள் ஏதோ சிக்கல்ன்னு கேள்விப்பட்டேன். மற்றபடி ஒண்ணும் இல்லைன்னு சொல்லுறாங்க. மாணவிகள் விடுதிக்குள் செயலாளர் போனார்ங்கிற குற்றச்சாட்டை தனிப்பட்ட முறையில் விசாரிக்கிறேன்.” என்றார்.
அந்தப் பள்ளியின் நிர்வாகிகள் விசாரிக்கப்பட வேண்டும்!