திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு மணி நேரம் தொடர்ச்சியாக கன மழை பெய்தது. இதனால், வேடசந்தூரிலிருந்து கூம்பூர் வழியாக கரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள வள்ளிபட்டி கிராமத்தில் உள்ள தரைப்பாலத்தில் பயங்கரமான காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது. காட்டாற்று வெள்ளம் காரணமாக அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது ஆர். வெள்ளோடு பகுதிக்கு திண்டுக்கல்லில் இருந்து சென்று விட்டு சண்முகம் என்பவர் காரை ஓட்டி வந்த நிலையில் இவரோடு பாலசுப்ரமணி, பாலகிருஷ்ணன், பாண்டியன், செல்வராஜ், மணிகுமார் ஆகிய ஆறு பேரும் காரில் திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
அப்போது காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலத்தை கடக்க அவர்கள் முற்பட்டுள்ளனர். அப்பொழுது ஆற்றின் கரை ஓரங்களில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சண்முகம், காரை ஓட்டி சென்றார். இதில் காட்டாற்று வெள்ளத்துடன் கார் அடித்து செல்லப்பட்டது. இதில் காரில் பயணித்த ஆறு பேரும் சிக்கிக் கொண்டனர். இந்தக் காட்சியை ஆற்றின் கரையோரத்தில் இருந்த நபர்களில் ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார் அது தற்போது வைரலாக பரவி வருகிறது.
கரைப்பகுதியில் நின்றிருந்த பொதுமக்கள் மற்றும் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு காரில் இருந்த ஆறு பேரையும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக உயிரை பணையம் வைத்து டிராக்டரின் மூலம் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் சம்பவ இடத்திற்கு வந்த வேடசந்தூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி மழைக்காலங்களில் தரை பாளங்களை கடக்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறார்.