Skip to main content

‘நீ போக வேண்டாம். நானே போகிறேன்’ - சிறுமியின் உருக்கமான தற்கொலை கடிதம்!  

Published on 23/10/2021 | Edited on 23/10/2021

 

Girl child passes away near coimbatore police found letter

 

கோவை, வடவள்ளி கணுவாய் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கனகவல்லி (30). இவருக்கும் பூதப்பாண்டி என்பவருக்கும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு டெங்கு காய்ச்சலால் இறந்தார். 

 

இதையடுத்து கனகவல்லி, பூதபாண்டியன் இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் கனகவல்லி, கணவர் பூதப்பாண்டியை பிரிந்து அந்தோணி சாமுவேல் என்பவரை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மகள் பிரியதர்ஷினியுடன் தனியாக வசித்துவந்தார். 

 

பிரியதர்ஷினி கணுவாய் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தார். சிறுவயதிலேயே தாயாருடன் வந்ததால் தன்னுடைய உண்மையான தந்தை யார் என்பது பிரியதர்ஷினிக்கு தெரியாமல் இருந்தது.

 

இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரியதர்ஷினிக்கு தனது தாய் இரண்டாவது திருமணம் செய்துகொண்டது தெரியவந்தது. இதனால், மனமுடைந்த பிரியதர்ஷினி மன உளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று (22.10.2021) மதியம் பிரியதர்ஷினிக்கும் அவரது தாய்க்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கனகவல்லி வெளியில் சென்றுள்ளார். மீண்டும் அவர் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. கதவை பலமுறை தட்டியும் திறக்காததால், அருகில் உள்ளவர்கள் உதவியுடன் கனகவல்லி வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார்.

 

அப்போது பிரியதர்ஷினி தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வடவள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

 

மேலும், கனகவல்லியின் வீட்டை காவல்துறையினர் ஆய்வுசெய்தனர். அப்போது தனது தாய் கனகவள்ளிக்கு பிரியதர்ஷினி எழுதிய கடிதம் ஒன்று கிடைத்தது. அதில், ‘நான் போகிறேன்... நான் போகிறேன் என்று அடிக்கடி கூறிவந்தாய். நீ போக வேண்டாம். நானே போகிறேன்’ என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தை வடவள்ளி போலீசார் கைப்பற்றி, வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். பிரேதப் பரிசோதனை முடிந்து பிரியதர்ஷினியின் உடல் அவரது தந்தை பூதப்பாண்டியிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்