தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பதில் இளைஞர்களும் பெற்றோரும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுடன் ஆர்வமுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களும் வீடு வீடாகச் சென்று மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளனர். பல கிராமங்களில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க கவர்ச்சிகரமான பரிசுகளையும் மாணவர்களுக்கு தேவையான உபகரணங்களையும் வழங்கி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தியுள்ளனர். இதனால் பல பள்ளகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஒரு சில பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கும் நிலையில் அந்த பள்ளியில் உள்ள ஆசிரியர்களை மாற்றுப் பணிக்கு அனுப்ப அதிகாரிகள் உத்தரவு போடும் நிலையில் மாணவர்களை அதிகம் சேர்த்து உத்தரவுகளை ரத்து செய்ய வைக்கும் நிகழ்வுகளும் நடக்கிறது. இப்படி பரிசுகளை இளைஞர்களும் கிராமத்தினரும் வழங்கிவந்த நிலையில் ஒரு வட்டார கல்வி அதிகாரி அரசுப் பள்ளியில் மாணவர்களை சேர்த்தால் பரிசும் பாராட்டு சான்றும் வழங்குவதாக அறிவித்திருப்பது மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது பெற்றோர்களையும் இளைஞர்களையும்.
இந்த அறிவிப்பு.. புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலைத் தொகுதியில் உள்ள அன்னவாசல் வட்டார கல்வி அலுவகத்திற்குட்பட்ட இலுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை தொடக்க விழா அன்னவாசல் வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு தலைமையில் நடைபெற்றது..
ஸ்மார்ட் வகுப்பறையினை தொடங்கி வைத்து வட்டார கல்வி அலுவலர் அரு.பொன்னழகு பேசும் போது தான் அறிவித்தார்.. மேலும் அவர் பேசும் போது.. அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களின் கல்வித் தரம் உயரவும், பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கவும் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.. அதன் ஒரு பகுதி தான் கணினி வசதியுடன் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க வேண்டும் என்பது.. ஆனால் ஸ்மார்ட் வகுப்பு அரசு பள்ளிகளில் தொடங்க வேண்டும் என அறிவிப்பு செய்துள்ள நிலையில் அரசை எதிர்பார்க்காமல் அதற்கு முன்பாகவே ஸ்மார்ட் வகுப்பறை தொடங்கிய இப்பள்ளி தலைமையாசிரியரின் பணி பாராட்டுக்குரியது.. தனியார் பள்ளிகளில் பல ஆயிரங்கள் செலுத்திப் பெற வேண்டிய ஸ்மார்ட் வகுப்பறை நமது இலுப்பூர் பள்ளியில் அமைந்துள்ளது தனி சிறப்பு. எனவே இங்கு வந்துள்ள ஒவ்வொரு பெற்றோர்களும் தங்கள் பகுதியில் உள்ள குழந்தைகளை 5 பேருக்கு மேல் கொண்டு வந்து இப்பள்ளியில் சேர்த்தார்கள் எனில் அவர்களுக்கு அன்னவாசல் வட்டார கல்வி அலுவலகத்தின் பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும் என்றார்..
ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க நிதி வழங்கிய திருச்சியைச் சேர்ந்த சபாபதி, ராஜா ஆகியோர்: சிங்கப்பூரில் பணிபுரியும் 25 நண்பர்கள் இணைந்து வாட்ஸ் குழு ஒன்று அமைத்துள்ளோம்.. இதில் தஞ்சை, திருநெல்வேலி என மாநிலத்தின் பல பகுதியில் உள்ள நண்பர்கள் இடம் பெற்றுள்ளனர்.. எங்களது நோக்கம் என்னவென்றால் நாங்கள் எப்போதும் சந்தோசமாக இருக்கனும், அதே நேரம் எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கனும் என்பதே .. மகிழ்ச்சி ஒன்றே முக்கியம் எங்களுக்கு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என நாங்கள் நினைத்துக் கொண்டிருந்தோம்.. அப்பொழுது இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயராஜ் எங்களிடம் கேட்டுக் கொண்டதின் பேரில் இப்பள்ளிக்கு சென்ற ஆண்டில் 1 இலட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிவறை கட்டி தந்துள்ளோம்.. இந்தாண்டு 1 இலட்சம் மதிப்பீட்டில் ஸ்மார்ட் வகுப்பறை தொடங்க புராஜெக்ட்டர், ஸ்பீக்கர், திரை அனைத்தும் வழங்கியுள்ளோம் என்றனர்.. இது போன்று நன்றாக செயல்படும் அரசு பள்ளிகளை அடையாளங்கண்டு நாங்கள் எங்களால் இயன்ற உதவியினை செய்ய தயாராக உள்ளோம் என்றனர்.
பள்ளியின் தலைமையாசிரியர் ஜெயராஜ்: இலுப்பூர் நகரின் மையத்தில் சிவன் கோவில் அருகில் எம் பள்ளி அமைந்துள்ளது.. பள்ளியில் பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனையும், சிந்திக்கும் ஆற்றலையும் மேம்படுத்தும் வகையிலும், ஒரு புதிய மாணவர் சமுதாயத்தை உருவாக்கும் பொருட்டு இப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை முறையில் பாடங்கள் பயிற்றுவிக்கும் முறையினை அறிமுகம் செய்துள்ளோம். இப்பள்ளியில் சுகாதாரமான கற்றோட்ட வசதி, கணினி வழிப்பயிற்சி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், பாதுகாப்பான சுற்றுச் சுவர் வசதி என பல்வேறு வசதிகள் உள்ளன.. இவை அனைத்தும் உள்ளூர் மக்கள் உதவியுடனும் ஜெர்மன் தம்பதி ஜோஸ்வா அவர்கள் அளித்த நன்கொடையுடனும் தான் செய்துள்ளோம். நான் தலைமை ஆசிரியராக பணிபுரியும் போது 100 க்கும் குறைவான மாணவர்கள் இருந்த இப்பள்ளியை 121 மாணவர்கள் பயிலும் பள்ளியாக மாற்றியதை மகிழ்வாக கருதுகிறேன். இன்னும் அதிக மாணவர்களை சேர்க்க வேண்டும் என்பதே எனக்கு இலக்கு அதற்கு வட்டாரக் கல்வி அலுவலரின் பரிசு அறிவிப்பு மேலும் உற்சாகத்தை கொடுத்துள்ளது என்றார்.
முன்னதாக அரசுப் பள்ளியின் தரம் குறித்த மாணவர்களுக்கும் வந்திருந்த பெற்றோர்களுக்கும் குறும்படம் திரையிட்டு காண்பிக்கப்பட்டது. விழாவில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அ.கோவிந்தராசு, வட்டார வள மைய பயிற்றுநர் மஞ்சுளா, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நல்லகுமார் மற்றும் ஏராளமான ஊர்ப்பொதுமக்கள் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.. முடிவில் ஆசிரியர் பிச்சைக் கண்ணு நன்றி கூறினார்..