உடல் நலம் குறைந்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்றுவரும் திமுக தலைவர் கலைஞர் பூரண நலம்பெற வேண்டும் என அவர் பிறந்த ஊரான திருக்குவளையில் உள்ள அவர் படித்தப்பள்ளியில் சிறப்பு பிராத்தனை நடைபெற்றது.
நாகை மாவட்டம் திருக்குவளையில் பிறந்த கலைஞர் ஆரம்ப கல்வியை திருக்குவளையில் உள்ள ஊராட்சி ஆரம்பபள்ளியில் படித்தார். அந்த பள்ளி பிற்காலத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியாக மாறியது. கலைஞர் படித்த அந்த பள்ளியில் இன்று மருத்துவமனையில் இருக்கும் கலைஞர் பூரணகுணமடைந்து வீடு திரும்பவேண்டும் என மாணவர்கள், ஆசிரியர்கள், கூட்டுப்பிராத்தனையில் ஈடுபட்டனர். அந்த பிரார்த்தனையில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் பதாகைகளுடன் மனமுருகி பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
அப்போது, ’’வா வா தலைவா உடல்நலம் பெற்று மீண்டும் திருக்குவளைக்கு வா வா’’ என இருகரம் கூப்பி பாடல் பாடி வேண்டுதலில் ஈடுபட்டனர். இதேபோல், திருக்குவளை அஞ்சுகம் முத்துவேலர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும் திமுக தலைவர் கலைஞர் உடல் நலம்பெறவேண்டி பிரார்த்தனை நடந்தது. அங்கும் ஏராளனமான மாணவ,மாணவிகள் மற்றும் திருக்குவளை கிராமமக்கள் கலந்துகொண்டனர்.
அதே போல் திருக்குவளையில் ஆரம்ப பள்ளி படித்த கலைஞர் பிறகு திருவாரூர் கமலாலய தென்கரையில் இருக்கு வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அந்த பள்ளிக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனது தொகுதி நிதியில் வகுப்பரைக்கட்டிடத்தை கட்டிக்கொடுத்து, அவரே தன்கையால் திறந்துவைத்து, தற்போது படித்துவரும் மாணவர்களிடம் தான் கடந்த காலத்தில் படித்த நிகழ்வுகளை சொல்லி நெகிழ்வூட்டினார்.
இந்த நிலையில் கலைஞர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட செய்தி அறிந்த அந்த பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் ஒன்று சேர்ந்து கடந்த வெள்ளிக்கிழமை அன்று கலை கூட்டுப்பிரார்த்தனை செய்து மனம் உருகி வேண்டினர். அதோடு கலைஞரின் புகழை பாடினர். அதே நாளில் திருவாரூரில் உள்ள கோயில்கள் சிலவற்றிலும் சிறப்பு பூஜை செய்தனர்.
கலைஞர் பிறந்த ஊரிலும், வளர்ந்த ஊரிலும் மாணவர்கள் மனம் உறுகி சிறப்பு கூட்டுப்பிராத்தனை செய்திருப்பது மீண்டும் கலைஞர் திருவாரூருக்கும் திருக்குவளைக்கும் வருவார் என உறுகுகின்றனர் திருவாரூர் மாவட்ட மக்கள்.