சேலம் ஜவ்வரிசிக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கியுள்ளது. இதனால் மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில் சேலம் மாவட்டம், மரவள்ளிக்கிழங்கு சாகுபடியில் முதன்மையாக விளங்கி வருகிறது. இம்மாவட்டத்தில் குறிப்பாக ஆத்தூர், கெங்கவல்லி, வீரகனூர், தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, கருமந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மக்காச்சோளத்திற்கு அடுத்தபடியாக மரவள்ளி பயிரிடுதல் பிரதானமாக உள்ளது. இப்பகுதிகளில் மட்டும் 32 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் மரவள்ளி பயிரிடப்பட்டு வருகிறது.
சேலம் மட்டுமின்றி நாமக்கல், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களிலும் கணிசமாக மரவள்ளி பயிரிடுதல் முதன்மையாக உள்ளது. மரவள்ளிக் கிழங்கை நேரடி உணவாகப் பயன்படுத்தி வருவது ஒருபுறம் இருக்க, அதில் இருந்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் மாவு உள்ளிட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்களும் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.
இதில் ஜவ்வரிசி, தமிழகத்தை விட வடமாநிலங்களில் முக்கிய உணவுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுவதால் அங்கு இதற்கு பெரிய அளவில் சந்தை வாய்ப்பு உள்ளது. ஸ்டார்ச் மாவில் இருந்து மருந்து, மாத்திரை தயாரிப்பிலும் முக்கியப் பங்கு வகிப்பதால் அதற்கும் ஆண்டு முழுவதும் வணிக வாய்ப்பு உள்ளது.
சேலத்தில் தயாரிக்கப்படும் ஜவ்வரிசி கூடுதல் தரமாக உள்ளது. இதனாலேயே ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் சேர்த்து ஜவ்வரிசி, ஸ்டார்ச் தர ஆய்வு மற்றும் வணிக ஒருங்கிணைப்பிற்காக சேலத்தில் சேகோ சர்வ் கூட்டுறவு நிறுவனத்தை அரசு தொடங்கி செயல்படுத்தி வருகிறது.
தனித்துவம் வாய்ந்த சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க கடந்த 2020ம் ஆண்டு முதல் சேகோ சர்வ் தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது மத்திய அரசு சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து வழங்கி உள்ளது. இதற்கான சான்றிதழை, தமிழக புவிசார் குறியீடு பதிவு பெற்ற பொருள்களின் அதிகாரம் பெற்ற அலுவலர் சஞ்சய் காந்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகத்திடம் வழங்கும் விழா, சேகோ சர்வ் நிறுவனத்தில் சனிக்கிழமை (ஆக. 26) நடந்தது.
பின்னர் சஞ்சய் காந்தி செய்தியாளர்களிடம் கூறியது: இந்தியா முழுவதும், இதுவரை 490 பொருள்களுக்கும், தமிழகத்தில் மட்டும் 59 பொருள்களுக்கும் புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. சேலத்தைப் பொறுத்தவரை சேலம் வெண்பட்டு, சேலம் மல்கோவா மாம்பழம் ஆகியவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ள நிலையில், தற்போது சேலம் ஜவ்வரிசிக்கும் இந்த அந்தஸ்து கிடைத்துள்ளது.
இதன்மூலம் ஜவ்வரிசி உற்பத்தியில் தனித்துவம், நம்பகத் தன்மையை மேம்படுத்தும். புதிய சந்தை வாய்ப்பை உருவாக்கும். ஜவ்வரிசி சார்ந்த உற்பத்தி பொருள்களுக்கு உள்நாடு, சர்வதேச சந்தைகளில் முக்கியத்துவம் கிடைக்கும். மரவள்ளி விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கும். ஜவ்வரிசி மற்றும் மரவள்ளிக்கிழங்கு மாவில் இருந்து உற்பத்தியாகும் பல்வேறு வகையான மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களின் மதிப்பு அதிகரிக்கும். ஜவ்வரிசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அதிகளவில் வாய்ப்பு ஏற்படும். இதனால் இந்திய பொருளாதாரம் மேம்படும்.
நம் முன்னோர்கள் 180 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே, மரவள்ளிக்கிழங்கை உணவாகப் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த 1943ம் ஆண்டு, சேலத்தைச் சேர்ந்த மாணிக்கம் செட்டியார் என்பவர் முதன்முதலில் மரவள்ளிக் கிழங்கில் இருந்து ஜவ்வரிசி உற்பத்தியைக் கொண்டு வந்தார். இவர்தான் இந்தியாவில் ஜவ்வரிசி உற்பத்தியை அறிமுகம் செய்தவர். அதன்பின் வெங்கடாசலம் கவுண்டர் என்பவருடன் சேர்ந்து ஜவ்வரிசியை விற்பனைக்குக் கொண்டு வந்தார். 1948ம் ஆண்டு முதல் ஜவ்வரிசி முழுமையாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டது.
இத்தனை பெருமைமிக்க சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் என்று, சேலம் சேகோ சர்வ் மூலம் கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய அதிகாரிகள், ஜவ்வரிசி உற்பத்தியாளர்கள், மரவள்ளி விவசாயிகள் சேர்ந்து மத்திய அரசுக்கு விண்ணப்பம் செய்தனர்.
புவிசார் குறியீடு வழங்கும் குழுவினர், சேலம் ஜவ்வரிசியின் தரம் குறித்து பலகட்ட சோதனைகள், ஆய்வுகள் நடத்தினர். அதன் பின்னர், சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு வழங்கலாம் என்று மத்திய அரசு முடிவு செய்தது. தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இவ்வாறு சஞ்சய் காந்தி கூறினார்.
சேலம் ஜவ்வரிசிக்கு புவிசார் குறியீடு அந்தஸ்து கிடைத்துள்ளதை அடுத்து மரவள்ளி விவசாயிகள், ஜவ்வரிசி, ஸ்டார்ச் உற்பத்தியாளர்கள், வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.