Skip to main content

சகோதரரின் நியமனத்தை எதிர்த்த தலைமைச் செயலாளர் இறையன்பு!

Published on 16/11/2021 | Edited on 16/11/2021

 

General Secretary Iraiyanbu opposes brother's appointment

 

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக, கடந்த வாரம் பொழிந்த கடும் மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளித்தது. இடுப்பளவுக்குத் தேங்கிய வெள்ளத்தை வெளியேற்ற மிகுந்த சிரமத்தையும் சிக்கலையும் சந்தித்தது சென்னை மாநகராட்சி நிர்வாகம்.

 

இந்த நிலையில், இதுபோன்ற சூழல் இனிவரும் காலங்களில் உருவாகக் கூடாது என்பதை திட்டமிட்டு, மழைநீர் தேங்குவதைத் தடுப்பதற்கான நிரந்த தீர்வு காணும் வழிகளை ஆராய்வதற்காக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்திருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். இவரது நியமனம் பல கேள்விகளை உருவாக்கியிருந்தது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் இறையன்புவின் சகோதரர்தான் திருப்புகழ் என்றும், மோடிக்கு நெருக்கமானவர் என்றும் என்பதைச் சுட்டிக்காட்டி பல்வேறு சர்ச்சைகள் பரவிவருகின்றன.

 

உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்து கோட்டை வட்டாரங்களில் விசாரித்தபோது, “இறையன்புவின் சகோதரர்தான் திருப்புகழ். இவர், குஜராத் கேடர் ஐ.ஏ.எஸ். அதிகாரி. குஜராத்தின் முதல்வராக மோடி இருந்தபோது, அவரது ஆட்சியில் முக்கிய துறைகளின் அதிகாரியாக பணியாற்றியவர். மோடியின் செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தவர் திருப்புகழ்.

 

பேரிடர் மேலாண்மைத் துறையில் பட்டம் பெற்றவர்; நிபுணத்துவம் கொண்டவர். குஜராத் பூகம்பத்தின்போது மீட்புப் பணிகளில் இவர் ஆற்றிய பணிகள் மிகச்சிறப்பானவை. பூகம்பம், சுனாமி, மழை வெள்ளம், சூறாவளி உள்ளிட்ட இயற்கை பேரிடர் காலச் சூழல்களை எதிர்கொள்வது குறித்து பல தீர்வுகளைக் கொடுத்தவர். அப்படிப்பட்ட அதிகாரியைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்கிற நோக்கத்தில்தான் திருப்புகழ் தலைமையில் ஒரு குழுவை அமைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

 

General Secretary Iraiyanbu opposes brother's appointment

 

அவரது நியமனத்திற்கான கோப்பு இறையன்புவின் ஒப்புதலுக்கும் பரிந்துரைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. அதனைப் பார்வையிட்ட இறையன்பு, அதனை ஏற்க மறுத்தார். அதேசமயம், “திருப்புகழ் எனது சகோதரர். இவரது நியமனத்துக்கு நான் ஒப்புதல் தருவது ஆரோக்கியமானதில்லை. இந்த நியமனம், தேவையற்ற விவாதங்களை ஏற்படுத்தும். எனக்கு இதில் உடன்பாடில்லை. அவரை என்னால் பரிந்துரைக்க முடியாது. முதலமைச்சர் முடிவு செய்யட்டும். என்னால் இந்தக் கோப்பில் கையெழுத்திட முடியாது” என்று அந்தக் கோப்பில் எழுதிவிட்டார்.

 

இதனையடுத்து, அதனைப் பார்வையிட்ட முதல்வர் அலுவலக அதிகாரிகள், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு இதனைக் கொண்டுசென்றனர். அதன்பிறகு, முதல்வரின் தீர்க்கமான முடிவின்படியே, திருப்புகழ் நியமிக்கப்பட்டார். திருப்புகழ் நியமனத்தில் இறையன்புவுக்கு தொடர்பு கிடையாது. அவரது சகோதரர் என்பதற்காகவும் நியமிக்கப்படவில்லை. மேலும், இந்தக் குழுவின் தலைவர் பதவிக்கு சம்பளம் எதுவும் கிடையாது” என்று தெரிவிக்கிறார்கள் தலைமைச் செயலக அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்