தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் செய்முறை தேர்வுகளுக்கான அட்டவணையும் வெளியிடப்பட்டிருந்தது. பொதுத்தேர்வு நடத்தப்படும் மாதங்களில் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிப்புகள் வெளியாகலாம் என யூகங்கள் கிளம்பியிருந்தது. இதனால் பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றங்கள் ஏதேனும் இருக்குமா என்ற சந்தேகங்களும் எழுந்திருந்தது.
இந்நிலையில் பொதுத்தேர்வு தேதியில் எந்த மாற்றமும் இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பில், 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. தேர்வு நாட்களில் தேர்தல் வந்து விடக்கூடாது என்பதற்காக இந்த விவரங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தேர்வுகள் நடைபெறுகின்ற நாட்களை தவிர்த்து மற்ற நாட்களில் தேர்தல் இருக்கவேண்டும் என்ற நோக்கில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இந்த விவரம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் படியே தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக மே மாதத்தில்தான் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருக்கும் என்ற சூழலில் இந்த நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.