கவுரி லங்கேஷ் படுகொலை - திருநாவுக்கரசர் கண்டனம்
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
மூத்த பத்திரிகையாளர், மதவாத எதிர்ப்பாளர் கவுரி லங்கேஷ் பெங்களுருவில் நேற்று காலை மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதவாத தீவிர அமைப்புகளான ஆர்.எஸ்.எஸ்., விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் ஆகியவற்றுக்கு எதிராக கட்டுரைகளை எழுதியும், பேசியும் கருத்துக்களை பரப்பி வந்தார். இந்துத்வா எதிர்ப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு, பெண்ணிய சிந்தனை ஆகியவற்றை வலியுறுத்துகிற வகையில் களத்தில் நின்று போராடியவர் கவுரி லங்கேஷ்.
கடந்த 2008 ஆம் ஆண்டு பா.ஜ.க. எம்.பி., பிரகலாத் ஜோஷி அவதூறு வழக்கை கவுரி லங்கேஷ_க்கு எதிராக தொடுத்திருந்தார். ஆனால் இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் பொருட்படுத்தாமல் வகுப்புவாத சக்திகளை எதிர்த்து போர்க்குரல் எழுப்பி வந்தார். இதை சகித்துக் கொள்ள முடியாத இந்துத்வா பிற்போக்கு தீவிரவாத சக்திகள் இன்றைக்கு அவரை படுகொலை செய்திருக்கிறார்கள். இதன்மூலமாக மதவாத எதிர்ப்பு சக்திகளை ஒடுக்கி விடலாம் என திட்டமிட்டு செயல்பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலத்தில் நக்சல் இயக்கத்திற்கும், மாநில அரசுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக தீர்வை ஏற்படுத்திய கவுரி லங்கேஷ் மறைவு மிகுந்த துயரத்தை தருவதாக முதலமைச்சர் சித்தராமையா கூறியிருக்கிறார். மேலும் படுகொலையில் சம்மந்தப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். படுகொலையில் சம்மந்தப்பட்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டிய பொறுப்பு கர்நாடக அரசுக்கு இருக்கிறது. இத்தகைய சக்திகளை முற்றிலும் ஒடுக்குவதன் மூலமே கருத்துச் சுதந்திரம் பாதுகாக்கப்படும்.
ஜனநாயக நாடான இந்தியாவில் ஒரே குரல் தான் ஒலிக்க வேண்டும் என்பதால் ஆர்.எஸ்.எஸ்., வி.எச்.பி. போன்ற மதவாத அமைப்புகளுக்கு எதிராக கூறப்படுகிற கருத்துக்களை ஒடுக்கி விடலாம் என நரேந்திர மோடி அரசு கருதி செயல்படுவதாக அகில இந்திய காங்கிரஸ் துணைத் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் கூறியிருப்பதை இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். மேலும் மாற்று கருத்து கூறுபவர்களை தண்டனைக்கு உட்படுத்த வேண்டுமென பா.ஜ.க. அரசு விரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.
பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் படுகொலையை கண்டித்து இன்று காலை சென்னை பத்திரிகையாளர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி பங்கேற்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறது. பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள், சிந்தனையாளர்கள் பா.ஜ.க. ஆட்சியில் தொடர்ந்து படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த எம்.எம். குல்புர்கி ஆகியோர் படுகொலை செய்யப்பட்டுள்ளதை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். சகிப்புத்தன்மையே இல்லாத அராஜக, வன்முறை போக்கு கொண்ட ஆட்சி மத்தியிலே நடைபெற்று வருவதால் இத்தகைய படுகொலைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இத்தகைய நடவடிக்கைகளுக்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரண்டு எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென காங்கிரஸ் கட்சி சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
மதவாத, தீவிரவாத சக்திகளுக்கு எதிராக கருத்து கூறிய கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டிருப்பதற்கு கடுமையான கண்டனத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவிப்பதோடு, அவரது குடும்பத்தினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு அனுதாபத்தையும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.