Skip to main content

கௌரி லங்கேஷ் படுகொலை! இந்துத்துவா பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்! விசிக கண்டனம்!

Published on 08/09/2017 | Edited on 08/09/2017
கௌரி லங்கேஷ் படுகொலை!
இந்துத்துவா பயங்கரவாதிகளின் காட்டுமிராண்டித்தனம்!
விசிக கண்டனம்!

கர்நாடகா மாநிலத்தைச் சார்ந்த பிரபல பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான கௌரிலங்கேஷ் அவர்களைக் கடந்த செப்டம்பர் 5 அன்று வகுப்புவாத பயங்கரவாதிகள் சிலர் துப்பாக்கியால் சுட்டுப் படுகொலை செய்துள்ளனர். அவருக்குக் குழந்தைகள் இல்லை. கணவரைப் பிரிந்து தனித்து வாழ்ந்து வந்த அவரைக் குறிவைத்துக் கொடூரமாக கொலை செய்துள்ளனர். இந்துத்துவப் பயங்கரவாதிகளின் இந்தக் காட்டுமிராண்டித்தனத்தை விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.

கௌரி லங்கேஷின் தந்தை லங்கேஷ் அவர்கள் கன்னட கவிஞரும் இதழாளரும் ஆவார். அவரின் மறைவுக்குப் பின்னர் அவர் நடத்திவந்த கன்னட இதழை, கௌரி அவர்கள் தொடர்ந்து சில ஆண்டுகள் நடத்தினார். பின்னர் ஆங்கில இதழ் ஒன்றில் பணியாற்றினார். அப்போது அவர் ஏராளமான அரசியல் விமர்சனக் கட்டுரைகள் எழுதினார். 

குறிப்பாக, பாரதிய சனதாவையும் சங்-பரிவார் அமைப்புகளையும் அதன் முன்னணி பொறுப்பாளர்களையும் வெளிப்படையாக விமர்சித்தார். பாரதிய சனதாவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஊழலை அம்பலப்படுத்தினார் என்பதனால் அவர்மீது அவதூறு வழக்குத் தொடுத்தனர். 

இவ்வாறு இந்துத்துவத்திற்கு எதிராகவும் ஊழலுக்கு எதிராகவும் அவர் செயல்பட்டதனால், அவர் நக்சல்பாரி இயக்கத்தைச் சார்ந்தவர் என்றும் இந்துத்துவத்துக்கு எதிரி என்றும் கருதி அவருக்குத் தொடர்ச்சியாகக் கொலைமிரட்டல்கள் விடுத்துள்ளனர். எனினும், இதனை அவர் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளவில்லை. 

நக்சல்பாரிகளுடன் நல்லிணக்கப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான அரசு அமைத்த குழுவில் அரசுத்தரப்பு பிரதிநிதியாக கௌரி லங்கேஷ் அவர்களை நியமித்தார் கர்நாடக முதல்வர் சித்தராமையா. இதற்கு இந்துத்துவ சக்திகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. ஆனாலும் முதல்வர் அதற்கு அசைந்து கொடுக்கவில்லை. கௌரி அக்குழுவில் இயங்கினார். 

இந்நிலையில்தான் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்.ஏற்கனவே, பெங்களூரில் இடதுசாரி சிந்தனைகொண்ட எழுத்தாளர் கல்புர்கி இதேமுறையில் கொல்லப்பட்டார் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். அந்தப் படுகொலைக்கு எது காரணமாக இருந்ததோ அதனடிப்படையில் இந்தப் படுகொலையும் நடந்திருக்கலாம் என்பதே பொதுக்கருத்தாக உள்ளது. 

எனவே, இந்தப் படுகொலை வழக்கை விசாரிக்க "சிறப்புப் புலனாய்வுக் குழு " ஒன்றை உடனடியாக கர்நாடக அரசு அமைத்திடவேண்டுமெனவும் கொலையாளிகள் அனைவரையும் கைது செய்து தண்டித்திட வேண்டுமெனவும் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. 

அத்துடன், தொடர்ச்சியாக கர்நாடகாவில் நடைபெற்று வருகிற இந்துத்துவ மதவெறியாட்டத்தை தடுத்துநிறுத்திட- முற்போக்கு - சனநாயக சிந்தனையாளர்களைப் பாதுகாத்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறோம்.”

சார்ந்த செய்திகள்