கவுரி லங்கேஷ் படுகொலை: சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்
பெங்களூருவில் மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதற்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் பெங்களூருவில் நேற்று மாலை மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பத்திரிகையாளர்கள், சமுக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த படுகொலை சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.
மறைந்த கன்னட எழுத்தாளரும், முற்போக்கு சிந்தனையாளருமான லங்கேஷின் மகள் கவுரி லங்கேஷ் (55). கன்னட நாளிதழில் பத்திரிக்கையாளராக பணியை தொடங்கிய கவுரி லங்கேஷ், தன் தந்தையின் மறைவுக்கு பிறகு லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியராக பொறுப்பேற்றார்.
கவுரி லங்கேஷ், தனது பத்திரிகையில் மட்டுமல்லாமல் கன்னட மற்றும் ஆங்கில பத்திரிக்கைகளில் மதவாத எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, பெண்ணிய சிந்தனை, மூட நம்பிக்கை எதிர்ப்பு தொடர்பாக தொடர்ந்து எழுதி வந்தார்.
கடந்த 2008-ம் ஆண்டு பாஜக எம்பி பிரஹலாத் ஜோஷி கவுரி லங்கேஷூக்கு எதிராக அவதூறு வழக்கு தொடுத்தார். தொடர்ந்து , கவுரி லங்கேஷூக்கு மதவாத அமைப்புளிடம் தொடர்ந்து ஏராளமான கொலை மிரட்டல்கள் வந்து கொண்டிருந்த நிலையில் , நேற்று (05-09-2017 ) இரவு 8 மணியளவில் அவரது வீட்டு வாசலுக்கு எதிரே மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த படுகொலையை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கின்றது.
கர்நாடக அரசு , கவுரி லங்கேஷ் படுகொலையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வேண்டும். மேலும் மத்திய, மாநில அரசுகள் பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி படுத்த வேண்டும் என்று அரசுகளை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.