நடப்பு மார்ச் மாதத்தில் மானியமில்லாத வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலை 55 ரூபாய் குறைந்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இந்தியாவில் நிலவும் சந்தை தேவை, உற்பத்தித்திறன் உள்ளிட்ட அம்சங்களின் அடிப்படையில் மாதந்தோறும் வீட்டு உபயோக காஸ் சிலிண்டர், வர்த்தக காஸ் சிலிண்டர் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
மாதத்தின் கடைசி நாளில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு காஸ் சிலிண்டர் விலைகளை நிர்ணயம் செய்வது நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த பிப். மாதத்தைப் பொருத்தமட்டில் ஜன. மாத இறுதி நாளில் கூடிய எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு வர்த்த காஸ் சிலிண்டர் விலையை மட்டுமே மாற்றி அமைத்தன. ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் பிப். 12ம் தேதியன்று திடீரென வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை ஒரேயடியாக 147 ரூபாய் உயர்த்தி அறிவித்தது. இது, காஸ் நுகர்வோரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், நடப்பு மார்ச் மாதத்திற்கு மானியமில்லாத வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் விலையை 55 ரூபாய் குறைக்கப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த மாதம் 881க்கு விற்கப்பட்ட இவ்வகை சிலிண்டர், நடப்பு மாதத்தில் 826 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் 898ல் இருந்து 843 ரூபாயாக குறைந்துள்ளது.
அதேபோல் 19 கிலோ எடையுள்ள வர்த்தக காஸ் சிலிண்டர் கடந்த மாதத்தைக் காட்டிலும் நடப்பு மார்ச் மாதத்திற்கு 85 முதல் 88 ரூபாய் வரை குறைக்கப்பட்டு உள்ளது. சேலத்தில் கடந்த மாதம் 1551.50 க்கு விற்கப்பட்ட வர்த்தக காஸ் சிலிண்டர் இந்த மாதம் 1463.50 ஆக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.