சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர். சிறையிலிருந்து வெளியே வர ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் ஆளுநர் மாளிகை முகப்பு வாயிலில் பெட்ரோல் குண்டு வீசியதாகப் பிடிபட்ட ரவுடியை விசாரித்ததில் தெரியவந்துள்ளது.
சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்றவைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி பா.ஜ.க. தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஒரு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடந்தது. இந்த வழக்கில் தான் அப்போது கைது செய்யப்பட்டார் கருக்கா வினோத்.
இந்த சம்பவத்தில் அவர் கைது செய்யப்பட்ட போதே போலீஸார், ‘கருக்கா வினோத்தைப் பொறுத்தவரை, நானும் ரவுடிதான் என்ற வடிவேலு கதாபாத்திரத்தை நினைவுபடுத்துகிற கேரக்டரா இருக்கார். இப்படித்தான் 2015-ல் சவுத்போக் ரோட்டில் இருந்த டாஸ்மாக் கடை மீது பெட்ரோல் குண்டு வீசினான். அப்ப ஒரு அரசியல் கட்சித் தலைவர் மதுக்கடையை மூட வேண்டும் எனப் போராட்டம் நடத்தினார். அந்தக் கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ரூ.200 தான் கொடுத்தார். அதுக்காகவே டாஸ்மாக் கடையில் குண்டை வீசிட்டார். இப்ப அந்த மதுக்கடையையும் அங்கிருந்து எடுத்துவிட்டனர். அதனால், அந்த சம்பவத்தை இப்பவும் பெருமையா சொல்லிக்கிருவார். அதுக்கு அப்புறம் இன்னொரு ரவுடி தூண்டுதலின் பேரில், தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல பெட்ரோல் குண்டை வீசிட்டு ஓடிட்டார். தனிப்படை போலீஸார், அந்த ரவுடியின் வீட்டிற்குப் போய் விசாரணைங்கிற பேர்ல தொந்தரவு பண்ணியதால், போலீஸாரை மிரட்ட அந்த ரவுடி தூண்டுதலின் பேரில் கருக்கா வினோத் போலீஸ் ஸ்டேஷன் மீது பெட்ரோல் குண்டை வீசினார். எப்பவுமே நம்மள டைம் லைன்ல வச்சிக்கிறனும்னு நினைக்கிறவர் இந்தப் பயபுள்ள’ என்றனர்.
அதேபோல், கருக்கா வினோத்தின் வீடு இருக்கும் ஏரியாவில் விசாரித்தபோது, ‘அவனுக்கு கஞ்சா வாங்கவும் சரக்கு வாங்கவும் காசு கொடுத்தால் போதும், யார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசச் சொன்னாலும் வீசுவான்’ என்று தெரிவித்தனர்.