தண்ணீர் பற்றாக்குறை, நிலத்தடி நீர் மட்டம் குறைதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைக்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக இருப்பது ஆற்று மணல் கொள்ளை ஆகும். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கச்சிபெருமாநத்தத்தில் ஒரு சிலர் பகல் நேரங்களில் 50-க்கும் மேற்பட்ட டிராக்டர் கொண்டு மணிமுக்தாற்றில் மணலை திருடிக் கொண்டு, தனி நபர்க்கு சொந்தமான இடத்தில் குவியலாக குவித்து வைக்கின்றனர்.
பின்னர் இரவு நேரங்களில் 20-க்கும் மேற்பட்ட லாரிகளில வந்து, மணலை ஏற்றிக் கொண்டு, அண்டை மாவட்டம் மற்றும் அண்டை மாநிலங்களில் பல லட்சத்திற்கு விற்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
இந்த மணல் திருட்டு அரசு அதிகாரிகள் துணையுடன் நடப்பதாகவும், தட்டி கேட்பவர்களுக்கு மிரட்டல் விடுப்பதாகவும் கூறுகின்றனர். தொடர்ச்சியாக அதிக அளவில் லாரிகள் அப்பகுதியில் இயக்கப்படுவதால் விபத்துகள் ஏற்படுகிறது என்றும், கள்ளதனமாக ஆற்று மணலை திருடும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரியும், நிலத்தடி நீர் மட்டத்தை காப்பாற்ற கோரி அப்பகுதி மக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.
இதேபோல் விருத்தாசலம் பகுதிகளில் நூதன முறையில் இருசக்கர வாகனத்தில் சாக்கு மூட்டையில் மணலை திருடி செல்லும் சம்பவமும் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது குறிப்பித்தக்கது.