குடியரசுத் தலைவர் விருது தமிழுக்குப் புறக்கணிப்பா? எரிமலைமீது அமர்ந்து வீணை வாசிக்க ஆசைப்படவேண்டாம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மனிதவள மேம்பாட்டுத் துறை ஆண்டுதோறும் செம்மொழி தகுதி பெற்ற மொழிகளைச் சார்ந்த அறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் விருது வழங்கி வருகிறது.
இவ்வாண்டு அறிவிப்பில் தமிழ்சார்ந்த எவருக்கும் விருது வழங்கப்படவில்லை என்பது அதிர்ச்சிக்குரியது.
இந்திய அளவில் 27 பேர். பன்னாட்டளவில் 9 பேருக்கு தலா ரூ.5 லட்சம் நிதியுடன் குடியரசுத் தலைவர் விருதும் அளிக்கப்படுவது வழக்கமாகும்.
இதற்கான தகுதிகள் பட்டியலில் தமிழ்மொழி சார்ந்த அறிஞர்கள் யாரும் இல்லை என்று மத்திய பி.ஜே.பி. அரசு முடிவு செய்துவிட்டதா? இது தமிழ்மீதும், தமிழர்கள்மீதும், தமிழ்நாட்டின்மீதும் தொடுக்கப்பட்ட பண்பாட்டுப் போர் என்பதில் அய்யமில்லை.
தமிழர்களை சீண்டிப் பார்ப்பதா?
தமிழ்நாட்டில் தாங்கள் கால் பதிக்க முடியவில்லை என்ற கோபத்தில், இத்தகைய முடிவினை மத்திய பி.ஜே.பி. அரசு எடுத்திருக்கிறதா?
தமிழர்களைச் சீண்டிப் பார்ப்பதில் மோடி அரசுக்கு அப்படி என்ன ஓர் ஆனந்தம்?
கண்டிக்கிறோம்! கண்டிக்கிறோம்!!
மத்திய அரசின் இந்தப் போக்கை மிகக் கடுமையாகக் கண்டிக்கிறோம். தமிழ்நாடு அரசு வழக்கம்போல ஆமாம் சாமி போடாமல், உடனடியாக மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துடன் தொடர்பு கொண்டு, தமிழுக்கும், தமிழர்களுக்கும் உரிய மரியாதை அங்கீகாரம் உறுதிப்படுத்தப்படவேண்டும்.
தமிழ் நீஷப் பாஷை என்ற கண்ணோட்டம்
சமஸ்கிருதம்தான் இந்திய ஆட்சி மொழி ஆகவேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸின் கொள்கை. அதோடு சமஸ்கிருதவாதிகளுக்குத் தமிழ் என்றாலே நீஷ பாஷை என்ற எண்ணம் எப்பொழுதும் இருந்திருக்கிறது. அதனுடைய தொடர்ச்சிதான் - தமிழைப் புறக்கணிப்பதாகும்.
தமிழ்நாடு கொந்தளிக்கும்
தமிழ்நாடே கொந்தளித்து எழும் - எரிமலையில் அமர்ந்து வீணை வாசிக்க ஆசைப்படவேண்டாம் - எச்சரிக்கை!
இவ்வாறு கூறியுள்ளார்.