
தென்காசி மாவட்டத்தின் சங்கரன்கோவில் நகரின் தாலுகா போலீசார் நேற்று (25.06.2021) இரவு புளியங்குடி - சங்கரன்கோவில் சாலையில் வாகனச் சோதனையில் இருந்திருக்கிறார்கள். அது சமயம் வேகமாக வந்த காரை ஈச்சம்பொட்டல்புதூர் அருகே மடக்கியிருக்கிறார்கள். அதனை சோதனையிட முயன்றபோது காரில் வந்தவர்களில் 4 பேர் தப்பி ஓட, இரண்டு பேர் மட்டும் சிக்கியிருக்கிறார்கள்.

பின்னர் போலீசார், காரை சோதனையிட்டபோது அதில் இருபத்தாறு கிலோ எடை கொண்ட கஞ்சாவைத் தனித்தனி பொட்டலமாகப் போட்டு வைத்திருந்தது தெரியவந்தது. அதனைக் கைப்பற்றியதோடு, சிக்கிய இருவரை விசாரித்திருக்கிறார்கள். விசாரணையில் அவர்கள் நெல்லை பேட்டையைச் சேர்ந்த முகமது ரசாக் மற்றும் சுடலை முத்து எனத் தெரிய வந்திருக்கிறது.
அதையடுத்து முறையான விசாரணையில் இதுபோன்ற கஞ்சா பொட்டலங்களைக் காரில் வைத்துக்கொண்டு ஊர் ஊராய்ச் சென்று விற்றுவருவதுண்டு. வாசுதேவநல்லூர், புளியங்குடி, சிவகிரி பகுதிகளில் விற்பதற்காகச் சென்றபோது பிடிபட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள். பிடிபட்டவர்களைக் கைது செய்ததோடு கார் மற்றும் கஞ்சா பொட்டலங்களைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், தப்பியோடிய நான்கு பேரையும் தேடிவருகின்றனர்.
காரில் கஞ்சா பொட்டலங்களைக் கடத்தி ஊர் ஊராய்ச் சென்று விற்ற சம்பவம் சங்கரன்கோவில், புளியங்குடி பகுதிகளில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.