Skip to main content

20 வருட பகை; வக்கீலை படுகொலை செய்த கும்பல்

Published on 23/02/2023 | Edited on 23/02/2023

 

a gang incident lawyer in Tuticorin
முத்துக்குமார்

 

தூத்துக்குடியின் அய்யனடைப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிச்சைக்கண்ணன். இவருக்கு முத்துக்குமார், ராம்குமார், சிவக்குமார் என மூன்று மகன்கள். மூத்தவர் முத்துக்குமார் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாகப் பணிபுரிந்து வருவதுடன், ஆட்சியர் அலுவலகம் அருகே நகைக்கு கடன் வழங்கும் பைனான்ஸ் நிறுவனமும் நடத்தி வருபவர்.

 

நேற்று மதியம் 2 மணியளவில் கோர்ட் வேலை முடிந்து தனது நிதி நிறுவனத்திற்கு வந்துள்ளார் முத்துக்குமார். காரிலிருந்து இறங்கிய அவரை பைக்குகளில் பின் தொடர்ந்து வந்த 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அவரை சுற்றி வளைத்து ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. அந்தக் கும்பலிடமிருந்து உயிரைக் காப்பாற்ற தப்பியோட முயன்ற முத்துக்குமார் அங்குள்ள கழிவு நீர் ஓடையில் விழுந்தவர் துடிதுடித்து உயிரிழந்திருக்கிறார். கும்பல் தப்பியோடியது. பட்டப் பகலில் நடந்த கொடூர படுகொலை குறித்து தகவலறிந்த எஸ்பி பாலாஜி சரவணன், டிஎஸ்பிக்களான சத்யராஜ், சுரேஷ் உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடம் வந்தவர்கள் முத்துக்குமாரின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு விசாரணையை மேற்கொண்டனர்.

 

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த 2003ம் ஆண்டு கோரம்பள்ளம் பகுதியில் ஆத்திப்பழம் என்பவர் கொலை செய்யப்பட்டு அங்குள்ள குளப் பகுதியில் புதைக்கப்பட்டார். அதன் பின் தகவல் கசிந்து 2006ம் ஆண்டு அவரது உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அந்தக் கொலை வழக்கில் முத்துக்குமாரின் தம்பி சிவக்குமார் முக்கிய குற்றவாளியானார். இந்தக் கொலைக்குப் பழியாக கடந்த 2019 ஆகஸ்ட் 21 அன்று தூத்துக்குடி நீதிமன்றம், அதனையடுத்துள்ள தென் பாகம் காவல் நிலையமருகே ஆத்திப்பழத்தின் தம்பி கோரம்பள்ளம் ராஜேஷ் மற்றும் 18 பேர் சேர்ந்து சிவகுமாரை படுகொலை செய்தனர். இந்த வழக்கில்  தற்போது வரை மூன்று ஆண்டுகளாக ராஜேஷ் கோவை  சிறையில் இருந்து வருகிறார்.

 

ராஜேஷ் ஜாமீன் தாக்கல் செய்யும் போதெல்லாம் அவரை ஜாமீனில் வெளியே வர முடியாதபடி வக்கீல் முத்துக்குமார் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து வந்துள்ளார். மேலும் கொலை வழக்கில் ராஜேஷை சிக்க வைப்பதற்கு காரணமானவர் முத்துக்குமார் என்பது அத்தரப்பின் ஆத்திரத்திற்கு காரணம் என்றும் சொல்லப்படுகிறது. இந்தச் சூழ்நிலையில் தான் ராஜேஷின் நண்பர்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து வக்கீல் முத்துக்குமாரை கொலை செய்துள்ளது தெரிய வந்திருக்கிறது. இதனிடையே ராஜேஷின் அண்ணனான ஜெயபிரகாஷ் தலைமறைவாகி விட்டாராம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவர, தலைமறைவானவர்களைப் பிடிக்கத் தனிப்படைகளும் அமைக்கப்பட்டுள்ளன என்கிறார்கள்.

 

2019ன் போது சட்டக்கல்லூரி மாணவரான சிவக்குமார் தூத்துக்குடி கோர்ட் அருகில் வெட்டிக் கொல்லப்பட்டார். தற்போது அவரது அண்ணன் வக்கீல் முத்துக்குமார் கலெக்டர் அலுவலகம் அருகே வெட்டிக் கொல்லப்பட்ட பழி வாங்கும் சம்பவம் உப்பு நகரைப் பதற்றத்தில் தள்ளியிருக்கிறது. பதற்றம் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்