'புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் சுற்றுவட்டார கிராமங்களில் பெண் வேடமிட்டு 10 பேர் குழந்தைகளை கடத்த இறங்கி உள்ளனர். அதில் ஒருவன் பிடிபட்டு விட்டான். மீதிப்பேர் எங்கே என்று தெரியவில்லை. அதனால் கவனமாக இருங்கள்' என்ற ஒரு ஆடியோவுடன் சிறிய வீடியோ ஒன்றும் புதுக்கோட்டை, தஞ்சை மாவட்டங்களில் வியாழக்கிழமை காலை முதல் வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்களும் அச்சமடைந்துள்ளனர்.
என்ன நடந்தது? எப்படி இந்த வதந்தி பரவியது?
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கீரமங்கலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி சாலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு நேற்று வியாழக்கிழமை காலை சேலை, சட்டை அணிந்த ஒருவர் சென்று அங்கிருந்த சிலரிடம் தவறாக பேசியதும் அங்கிருந்தவர்கள் விரட்டியது அப்பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் நின்ற குழந்தைகளிடம் பேசியதைப் பார்த்த அப்பகுதியினர் கீரமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்து பிடித்து ஒப்படைத்துள்ளனர். அந்த நபரை காவல் நிலையம் அழைத்து வந்த போலீசார் விசாரணை செய்த போது அவர் பொன்னன்விடுதி கிராமத்தைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட நபர் என்பதும், வீட்டில் பாதுகாப்பில் இருந்து தப்பி வந்தவர் வழியில் எங்கோ காயப்போட்டிருந்த ஒரு பெண் சேலை, சட்டையை போட்டுக் கொண்டு கீரமங்கலம் வந்து இப்படி நடந்து கொண்டதும் தெரியவந்தது.
மேலும் சம்பந்தப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட நபரை அவரது உறவினர்கள் தேடிக் கொண்டிருப்பதும் தெரியவந்தது. அவர்களை அழைத்து சம்பந்தப்பட்ட ஒப்படைத்துள்ளனர். ஆனால் அதற்குள் குழந்தைகளை கடத்த பெண் வேடமிட்டு 10 பேர் வந்ததில் ஒருவர் சிக்கிக் கொண்டார் மற்றவர் இந்தப் பகுதியில் சுற்றுவதாக ஆடியோ வதந்தி பரவிக் கொண்டிருக்கிறது. இப்படி யாரும் வரவில்லை பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று போலீசார் கூறுகின்றனர்.