தமிழ்நாடு முதல்வர் அனைத்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளித்திருப்பதுபோல இந்து மத விழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்கிறார் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர். செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைப்பது குறித்தான ஆலோசனைக் கூட்டத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இந்து முன்னணி மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இந்து முன்னணி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பொதுச் செயலாலாளர், “திருவாருர் மாவட்டத்தில் 500 இடங்களில் இந்து முன்னணி சார்பாக விநாயகர் சிலையைப் பிரதிஷ்டை செய்து ஊர்வலம் நடைபெற உள்ளது. ஜாதி பேதமில்லாத ஒற்றுமையை உருவாக்க வேண்டும். இதற்கு பொது மக்கள் பெரும் ஆதரவு அளிக்க வேண்டும். அதேபோல தமிழ்நாடு முதல்வர் அனைத்து மத திருவிழாவிற்கும் அனுமதி அளிப்பதுபோல, இந்து மத விழாவான விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்தவும் அனுமதியளிக்க வேண்டும். பொதுமக்கள் பேராதரவு அளித்து இந்து மதத்தைப் பாதுகாக்க வேண்டும். அதேபோல இந்துக்களின் உரிமைகளை அரசு ஒடுக்கக் கூடாது” என தெரிவித்தார்.