Published on 29/04/2020 | Edited on 29/04/2020
பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பு ரத்து செய்யும் தமிழக அரசின் செயலுக்கு தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசானது கரோனோ வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைக்காக நிதி நிலையை காரணம்காட்டி, அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை (சுமார் 18 மாதம்) அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படாது என்றும், ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் வழங்கப்படாது என்றும், வருங்கால வைப்பு நிதியின் வட்டி விகிதத்தை 7.9 லிருந்து 7. 1 ஆக குறைத்து அரசாணை பிறப்பித்துள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தமிழக அரசானது கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உள்ளபோது, எமது அமைப்பு முதன் முதலில் ஒரு நாள் ஊதியத்தை அரசுக்கு வழங்குவது என முடிவு செய்து, அந்த நிதியை ஜாக்டோ - ஜியோ பேரமைப்புடன் இணைந்து ரூ 150 கோடியினை மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் நிவாரண நிதிக்கு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அதே வேளையில் பல்வேறு கடன் சுமைகளை சுமந்து கொண்டு கரோனோ தொற்று தடுப்பு நடவடிக்கையில் உயிரை பணையம் வைத்து இன்று வரை அரசுக்கு நற்பெயரை ஈட்டி, பொது மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் இன்று வரை களத்தில் நின்று, என்றும் பணியாற்றி வருபவர்கள் எமது ஊழியர்களே.
மேலும் ஓர் அரசு என்பது ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் உள்ளடக்கிய ஒரு பகுதி. ஆனால் தமிழக அரசானது எங்களை மாற்றாந்தாய் பிள்ளைகளை போல் கருதி பல்வேறு ஒடுக்கு முறை நடவடிக்கைகளை செய்து வருவது, "இளகின இரும்பை கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான் என்பது போலவும், "கடைந்த மோரிலே, குடைந்து வெண்ணெய் எடுப்பது போலவும்" தொடர்ந்து தாக்குதலை அரசு தொடுத்து வருகிறது. இச்செயல் எதிர்காலத்தில் நல்ல சூழ்நிலையை உருவாக்காது என்று எமது அமைப்பு கருதுகிறது.
மேலும் தொழிற் சங்க போராட்ட வரலாற்றில் அதிகார வர்க்கமும், சர்வாதிகார போக்கும் வென்றதாக வரலாறு இல்லை என்பதையும் எமது அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. அதே வேளையில், பேரிடர் காலங்களில் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை சமாளிக்க, மத்திய அரசிடமிருந்து மாநில அரசு கூடுதல் அழுத்தத்தை கொடுத்து பேரிடர் காலத்திற்கு வழங்க வேண்டிய கூடுதல் நிதியை பெறுவதற்கு உரிய நடவடிக்கையை மேற்க்கொள்ள வேண்டும்.
மேலும், மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி உள்ளிட்ட வரி பாக்கி பங்கு தொகையை முழுமையாக பெற்று இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு போர்க்கால அடிப்படையில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், கடந்த காலத்தில் சட்ட மன்ற கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட அனைத்து படிகளையும் உயர்த்தி வழங்க தமிழக அரசானது நிதி ஒதுக்கியுள்ளதை ரத்து செய்து. அவர்களின் ஊதியத்தை பழைய நிலையிலேயே தொடர செய்து, இக்கூடுதல் நிதியை போர்க்கால அடிப்படையில் இத்தொற்று தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டும்.
மேலும் பெரும் பணக்காரர்களிடம் குவிந்துள்ள செல்வத்தில் பேரிடர் நிதிக்காக 5 சதவீதத்தை வசூலிப்பது மட்டுமல்லாமல், இவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வரிச்சலுகையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டு, இதிலிருந்து வரும் நிதியை இத்திட்டத்திற்கு பயன்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், தமிழக அரசால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பஞ்சப்படி , ஈட்டிய விடுப்பு ஊதிய தொகையானது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருமான வரி கணக்கு மற்றும் சந்தையில் வாங்கப்படும் பொருட்கள் மூலம் அரசுக்கு சுழற்சி முறையில் பற்று வைக்கப்பட்டு, மீண்டும் சந்தையில் பொருளாக மாற்றப்படும். இதனால் அரசுக்கு ஏற்படும் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு தீர்வாகாது மாறாக கூடுதல் நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதே உண்மையான பொருளாதார கூற்று என்பதை புரிந்து கொண்டு, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு ஊதியம், மற்றும் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு அரசாணைகளை ரத்து செய்து மீண்டும் பறிக்கப்பட்ட உரிமைகளை பெற்று வழங்கிட தமிழக அரசானது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாநிலக் கழகம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.