பெரிய விளையாட்டு வீரனாகி அதன்மூலம் அரசுவேலை வாங்கி சாதிக்க வேண்டும் என்று கனவுகளோடு அரைக்கால் சட்டையும், மஞ்சள் பையுமாக சென்னைக்கு பேருந்து ஏறிய சிறுவனின் கனவின் முதல்பகுதி வென்றது. அடுத்தப்பகுதியான அரசுவேலை கனவாகவே போனது.. வேலைகிடைக்கும் வேலைகிடைக்கும் என்று காத்திருந்த விளையாட்டு வீரர் கடைசியில் தன் திறமைகளை மட்டும் உறிஞ்சிக் கொண்ட அரசுகள் வேலை கொடுக்கமால் தம்மை தூக்கி வீசுகிறது என்பதை உணர்ந்த பிறகு தனது சொந்த கிராமமான செரியலூர் கிராமத்தில் தனது சொந்த செலவில் கிராமப்புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்கி வருகிறார் முன்னாள் கைப்பந்து தேசிய விளையாட்டு வீரர் சிவக்குமார்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள செரியலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் (50). முன்னாள் கைபந்து வீரரான இவர் பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சினாலும் தனது உயரத்தில் 4 மி.மீ குறைவு என்ற ஒரே காரணத்தால் அரசு வேலைவாய்ப்புகளை பறிகொடுத்த நிலையில் தன்னால் பல விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளை உருவாக்க முடியும் என்று களமிறங்கி பலரை உருவாக்கி உள்ளார்.
தனது சொந்த தென்னந்தோப்பை அழித்து மைதானம் அமைத்து சுமார் 20 கிராம மாணவ, மாணவிகளுக்கு இலவசமா விளையாட்டு பயிற்சி அளித்து வருகிறார். அவர்களுக்கான உடை உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் சொந்த செலவில் செய்து வருகிறார். தற்போது சுமார் 300 பேர் பயிற்சி பெற்று வருகின்றனர். இவரின் இந்த முயற்சியால் பலர் இந்திய அளவிலும், மாநில அளவிலும் விளையாட்டில் சாதித்து வருகிறார்கள். பலர் அரசு வேலைக்கும் சென்றுள்ளனர். 70 பேர் விளையாட்டு விடுதியில் தங்கி படிக்கவும் பயிற்சி கொடுத்து அனுப்பியுள்ளார். ஏழை மாணவர்களுக்கு பயிற்சி கொடுப்பதன் மூலமே தான் ஏமாற்றப்பட்டதை மறந்து வருகிறேன் என்கிறார்.
இதுகுறித்து பயிற்சியாளர் சிவக்குமார் கூறும் போது.. 1982 ம் ஆண்டு செரியலூர் தொடக்கப்பள்ளியில் படித்த பிறகு 6ம் வகுப்பு கீரமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அப்போது இருந்த பி.டி ஆசிரியர் என்னைப் பார்த்துவிட்டு விளையாட்டு வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று கைப்பந்து பயிற்சி கொடுத்தார். சில நாளில் சிறுவர்களுக்கான மாநில விளையாட்டு வீரர்கள் தேர்வு சென்னையில் நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து நானும் மற்றொரு மாணவியும் மட்டுமே கலந்துகொள்ள சென்றோம். அரைக்கால் சட்டையும், மஞ்சள் பையுமாக சென்னை நோக்கி பயணம். பேருந்தில் போகும் போதே பல கனவுகள். விளையாட்டின் மூலம் அரசு வேலை கிடைக்கும் என்று நினைத்தேன்.
சென்னை எனக்கு புதிய ஊர். அதுவரை அது போன்ற பெரிய ஊர்களைப் பார்த்ததில்லை. இறங்கியதும் பயம். என்னுடன் வந்த மாணவிதான் என்னை தேர்வு நடக்கும் இடத்தில் கொண்டுபோய் விட்டு சென்றார். போக்குவரத்து அதிகம் அதனால் சாலையை கடந்து சென்றால் வாகனங்களில் அடிபடுவோம் என்று சாப்பிடாமல் மைதானத்திலேயே இருந்தேன். அப்போதும் சும்மா இருக்கவில்லை அங்கே கிடந்த பந்தை எடுத்து சுவற்றில் அடித்துக் கொண்டே இருந்தேன். நிறுத்தவே இல்லை. இதை நீண்ட நேரம் கவனித்த தேர்வாளர்கள் இறுதியாக என்னை அழைத்து 12 வது ஆளாக மாநில வீரராக தேர்வு செய்தார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக ஊருக்கு வந்தேன். ஆனால் சத்தான உணவு கிடைக்கவில்லை எனக்கு. அதன்பிறகு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் படித்து பள்ளி முதல் கல்லூரி எல்லாவற்றிலும் சாதித்தேன். வேலைக்காக செல்லும்போது முதலில் விளையாடச் சொல்வார்கள் முதலிடத்தில் வெற்றி பெறுவேன். ஆனால் உயரம் குறைவு என்று காரணம் சொல்லி தட்டிக்கழித்தார்கள். இப்படியே வேலை தேடி 27 வருடங்கள் குதித்தேன்.
பிறகு இனியும் நமக்கு வேலை கொடுக்கமாட்டார்கள் என்பது நன்றாக தெரிந்த பிறகு ஊர் ஊராக சென்று விளையாட தொடங்கினேன்.
உங்களுக்கு ஏன் வேலை கொடுக்கவில்லை..
என் திறமையை பார்த்து இந்திய அரசாங்கம் பல்வேறு துறைகளில் விளையாட அனுமதி கொடுத்தது. ஆனால் கூலிக்கு விளையாடுபவனாக மட்டும் நினைத்துவிட்டது. இலங்கையில் நடந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு நானும் முக்கிய இடத்தில் இருந்தேன். இந்த முறையாவது வேலை கிடைக்கும் என்று ஊருக்கு வந்தேன். வந்த கையோடு ரூ. 50 ஆயிரம் பணத்தை கொடுத்து போய் வா என்றார்கள். எனக்கு ஒரு வேலை என்றேன். அதுக்கு உயரம் பத்தாது என்றார்கள். நான் விளையாட செல்லும் போதெல்லாம் அந்த உயரம் அவர்களுக்கு தடையாக இல்லை ஆனால் வேலை என்றதும் தடையாக இருந்துவிட்டது. எனக்கு அரசியல் பலம் இல்லை, கிராமத்தில் இருந்து வருகிறேன் என்ற ஒரே காரணத்தால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டேன்.
அதேபோல பி.எஸ்.என்.எல். என்னை விளையாட அழைத்தார்கள். வெற்றிக் கனிகளை பறித்துக் கொடுத்தேன். 3 ஆண்டுகள் அயராமல் விளையாடினேன். பிறகு வேலை கிடைக்கும் என்ற கனவு இருந்தது. அது பற்றி கேட்ட போது மாதம் ரூ. 2 ஆயிரம் வீதம் சம்பளம் கொடுத்து அனுப்பிவிட்டார்கள். அதாவது என்னுடைய இளைமை கால திறமைகளை இந்த அரசுகள் உறிஞ்சி எடுத்துக் கொண்டு வெறும் சக்கையாக என்னை வெளியே அனுப்பினார்கள். இதனால் விரக்தியடைந்தேன். இப்படி வேலை தேடியே 43 வயது வரை திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில தான் நாம் விளையாட்டு வீரனாக இருந்தும் அரசு வேலை கிடைக்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் நம்மால் முடிந்த அளவுக்கு கிராம புற மாணவர்களுக்கு பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன். பொருளாதாரம் இல்லை. அதனால் என் குடும்பத்திற்கு வருமானம் கொடுத்த தென்னந்த தோப்பில் பல தென்னை மரங்களை வெட்டி அகற்றிவிட்டு மைதானம் அமைத்தேன். விளையாடிய போது கிடைத்த பரிசு தொகை சேமிப்பை விளையாட்டு உபகரணங்கள் வாங்க பயன்படுத்தினேன். வீடு வீடாக சென்று சிறுவர்களை அழைத்து வந்து பயிற்சி கொடுக்க தொடங்கினேன். படிப்படியாக மாணவர்கள் எண்ணிக்கை உயர்ந்தது, அதாவது 300 மாணவ, மாணவிகள் விடுமுறை நாட்களில் பயிற்சிக்கு வருகிறார்கள். அவர்களுக்கு என்ன திறன் இருக்கு என்பதை அறிந்து கைப்பந்து, கால்பந்து, ஓட்டப்பந்தயம், பளு தூக்குதல் இப்படி தரம் பிரித்து பயிற்சி கொடுத்து வருகிறேன். ஓட்டப்பயிற்சிக்கு நல்ல ஓடுதளம் இல்லை அதனால் எங்கள் கிராமத்தில் கப்பி பெயர்ந்து கிடக்கும் சாலையில் தான் ஷு க்கூட இல்லாமல் என் மாணவர்கள் ஓடுகிறார்கள்.
தற்போது என்னிடம் பயிற்சி பெற்ற சிலர் விளையாட்டு இடஒதுக்கீட்டில் அரசு வேலைக்கு சென்றுவிட்டார்கள். ஒவ்வொரு வருடமும் 40 முதல் 50 பேர் நேசனல் லெவல் போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு கூடுதல் பயிற்சி அளித்து இன்டர் நேஷனல் அளவுக்கு அனுப்ப தயாராகிவிட்டேன். அதேபோல 70 மாணவ, மாணவிகளை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விடுதிகளில் தங்கி பயிற்சி எடுக்க சென்றுள்ளனர். இப்படி என்னிடம் வந்த அனைவரையும் பயிற்சி கொடுத்து விளையாட்டு வீரர்களாகவும் வீராங்கனைகளாகவும் உருவாக்கிவிட்டேன்.
ஆனால் இவர்களுக்கு உணவு, உடை, உபகரணங்கள் வாங்க வசதி இல்லை. கடந்த ஆண்டு வரை என் தென்னை மரங்கள் கை கொடுத்தது. தேங்காய்களை பறித்து விற்று அதில் விளையாட்டு உபகரணங்களும், குழந்தைகளுக்கு சத்துணவும் கொடுத்தேன். ஆனால் புயலில் தென்னை மரங்களும் சாய்ந்துவிட்டதால் இப்போது ரொம்ப சிரமத்தில் பயிற்சி கொடுக்கிறேன். நல்ல மைதானம் அமைக்க வசதி இல்லை. அதனால கரடு முரடான கிராமச்சாலையில் தான் பயிற்சி. என் மாணவர்களுக்கு ஷு வாங்க முடியாமல் வெறும்காலில் தான் பயிற்சி எடுக்கிறார்கள்.
ஒரு பந்துக்காக 10 கி.மீ தூரம் வரை சைக்கிள் ஓட்டி இருந்த நான் இப்போது ஆண்டுக்கு 100 பந்துகளை வாங்கி மாணவர்களுக்கு கொடுக்கிறேன். அரசுப் பள்ளிகளுக்கு தேவையான பந்துகளை நான் வாங்கி கொடுத்து வருகிறேன். அரசாங்கம் என் திறமையை மதிக்கவில்லை என்றாலும் மாணவர்கள் மதிக்கிறார்கள். அவர்களின் மதிப்பிற்கு நம்பிக்கையாக எப்போதும் இருந்து அவர்களை தரமான விளையாட்டு வீரர்களாக உருவாக்குவதே என் லட்சியம் என்றார்.