மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
கஜா புயலின் கோரத் தாண்டவம் 6 கடலோர மாவட்டங்களை நிலைகுலையச் செய்திருக்கிறது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோர பகுதிகள் கண்ணீரில் தவிக்கின்றன.
தமிழக முதல்வர் அறிவித்த 1000 கோடி நிவாரணம் போதாது. இதை மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழக அரசு கேட்கும் 15 ஆயிரம் கோடி ரூபாயை உடனடியாக வழங்கிட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ராணுவத்தை ஈடு படுத்திட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
மனிதநேய ஜனநாயக கட்சியின் பேரிடர் மீட்புக் குழு சார்பில் 4 மாவட்டங்களில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு பொட்டலங்கள், போர்வைகள், தண்ணீர் குடுவைகள், மிஸ்கட் பாக்கெட்டுகள், மெழுகுவர்த்திகள், கொசுவர்த்திகள், நாப்கீன்கள் ஆகியவற்றை வழங்கியுள்ளோம்.
நாகை, தோப்புத்துறை, கட்டிமேடு, திருப்பூண்டி, அதிராம்பட்டினம், உடைய நாடு ஆகிய இடங்களில் முகாம்கள் அமைத்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மஜக ஊழியர்கள் தொண்டாற்றி வருகிறார்கள்.
தன்னார்வ அமைப்புகள் மற்றும் ஜமாத்துகளின் சேவைகள் போற்றுதலுக்குரியது. இப்பகுதிகளை இந்திய பிரதமரும், தமிழக முதல்வரும் நேரில் வந்து பார்வையிட்டு மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார்.