Skip to main content

கஜா புயல் நிவாரணத்தை வங்கி கடனுக்கு வரவு வைத்துவிட்டதாக விவசாயி புகார்

Published on 12/01/2019 | Edited on 12/01/2019
gaja-storm



புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிக்கு வந்த நிவாரணத் தொகை மற்றும் 100 நாள் வேலை க்கு வந்த சம்பளத்தை வங்கி நிர்வாகம் கல்விக்கடனுக்கு பிடித்தம் செய்து கொண்டதாக விவசாயி புகார் கூறியுள்ளார். 

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் வீடுகள், மரங்கள் மற்றும் விவசாயம் முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அவர்களுக்கு பாதிப்புகளுக்காண நிவாரணத்தை தமிழக அரசு வங்கி கணக்கு மூலம் வழங்கி வருகிறது. பல வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கு வரும் நிவாரணத் தொகையை பழைய கடன்களுக்கு வரவு வைத்துக் கொள்வதாக எழுந்த புகாரையடுத்து புயல் நிவாரணத்தை வங்கிகள் கடனுக்கு வரவு வைக்க கூடாது என்று தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் அறிவித்துள்ளது. 

 

இந்த நிலையில் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா.  கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் கடந்த 2009-ல் ரூ.2.92 லட்சம் கடன் பெற்று புதுக்கோட்டை அருகே உள்ள தனியார் கல்லூரியில் ரம்யா, பிஎஸ்சி நர்சிங் படித்தார். 

 

  இந்நிலையில்  புயலினால் விவசாயி ராஜேந்திரனின் தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் முழுவதுமாக சேதம் அடைந்துவிட்டன. இதற்காக தமிழக அரசு ரூ.34 ஆயிரம் நிவாரணத் தொகையை இவரது வங்கிக்  கணக்கில் அரசு செலுத்தியது. இதை தனது செல்போனுக்கு வந்த குறுஞ்செய்தியின் வாயிலாக அறிந்து தொகையை பெறுவதற்காக வங்கிக்கு சென்றபோது அந்த தொகையை வங்கி நிர்வாகம் ஏற்கனவே மகள் படிப்பிற்காக வாங்கி இருந்த கல்விக் கடனுக்கு வரவு வைத்துக்கொண்டது தெரியவந்தது. மேலும், ராஜேந்திரன் மற்றும் அவரது மனைவி ராணி ஆகியோர் 100 நாள் வேலை திட்டத்தில் வேலை செய்து கிடைக்கும் சம்பளத் தொகையையும் வங்கி நிர்வாகம் வரவு வைத்துக் கொண்டதும் தெரியவந்தது. 

 

  புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான காலக்கெடுவை நீட்டித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கணேஷ் உத்தரவிட்டுள்ள நிலையில் விவசாயியின் நிவாரணத் தொகையை வங்கி நிர்வாகமே வரவு வைத்துக்கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து நடவடிக்கை எடுத்து நிவாரணத் தொகையை விடுவித்துத் தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேந்திரன் நேற்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

 

    இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கவிவர்மன் கூறும் போது, புயலால் பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் விவசாயிகள் வீடுகள், மரங்கள், பயிர்களை பறிகொடுத்துவிட்டு வாழ்வாதாதம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் அரசு மற்றும் தனியார் வங்கிகளில் நிதி நிறுவனங்களில் வாங்கிய கடன்களை கட்டச் சொல்லி விரட்டக் கூடாது என்றும் வங்கி கணக்கில் வரும் நிவாரணத் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல போராட்டங்களை நடத்தியதுடன் மாவட்ட நிர்வாகத்திடம் கடன்களை ரத்து செய்ய வலியுறுத்தி மனு கொடுத்திருக்கிறோம். அதே கோரிக்கையை வலியுறுத்தி மகளிர் சுயஉதவிக்குழு பெண்களும் போராட்டங்களை நடத்தி மனு கொடுத்துள்ளனர். அதன் பிறகு மாவட்ட நிர்வாகம் ஒரு வருடத்திற்கு கடன் மற்றும் வட்டி கட்ட கால அவகாசம் வழங்கியதுடன் நிவாரணத் தொகையை கடனுக்காக பிடித்தம் செய்யக் கூடாது என்றும் அறிவித்தது. ஆனால் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவை மீறி வங்கிகள் செயல்படுகிறது. கீரமங்கலம், கொத்தமங்கலம் மற்றும் மாவட்டம் முழுவதும் விவசாயிகளின் நிவாரணத் தொகையை கடனுக்கு வரவு வைத்துக் கொண்டு விவசாயிகளை பாதிப்பில் இருந்து மீளமுடியாமல் செய்கிறது. அதனால் வங்கிகளை கண்டித்து மக்களை திரட்டி விரைவில் போராட்டங்களை நடத்த உள்ளோம் என்றார்.
 

 

 


 

சார்ந்த செய்திகள்