கஜா புயல் பாதித்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன. ஆனாலும் இன்னும் விவசாயிகளின் துயரம் தீர்க்கப்படவில்லை. அரசு முன்வரவில்லை என்றாலும் தனியார் நிறுவனங்கள் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்த முன்வந்திருப்பது ஆதரவாக இருப்பதாக விவசாயிகள் நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.
நாகை மாவட்டம் வேதாரண்யம் பகுதி கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகள் மற்றும் வருவாய் தரக்கூடிய லட்சக்கணக்கான தென்னை, மா, முந்திரி,பலா, சவுக்கு உள்ளிட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. பாதிக்கப்பட்ட மக்கள் புயலால் பாதித்த வீடுகளை சீரமைக்கவும் முறிந்த மரங்களை அகற்றவும் பலஆயிரக்கணக்கான ரூபாய் தேவைப்படுவதால் பெரும்பாலான விவசாயிகள் பணம் இல்லாமல் மரங்களை அகற்றாமல் அப்படியே போட்டுவிட்டனர்.
இந்த நிலையில் வேதாரண்யம் அடுத்துள்ள புஷ்பவனம் கிராமத்தில் முறிந்த பல்லாயிரக்கணக்கான தென்னை மரங்கள் இன்னும் அகற்றப்படாமலேயே உள்ளன. இந்தசூழலில் இப்பகுதிகளை புணரமைக்கும் பணியை துவங்கியிருக்கிறது திருப்பூரை சேர்ந்த மத்திய அரிமா சங்கமும், இன்ஸ்பயர் என்ற சுற்றுச்சூழல் ஆராய்ச்சி நிறுவனமும். இவ்விரு நிறுவனத்தினரும் இணைந்து புஷ்பவனம் கிராமத்தில் தோப்பில் முறிந்து கிடக்கும் மரங்களை அகற்றி வருகின்றனர்.
அவர்களிடமே விசாரித்தோம், மரம் வெட்டும் 50க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் மரம் அறுக்கும் எந்திரங்களை பயன்படுத்தி மிக விரைவாக இலவசமாக செய்துக்கொடுக்கிறோம். இதுவரை 500 ஏக்கர் பரப்பளவில் முடிந்திருக்கு. இன்னும் 2000 ஏக்கருக்கு மேல் இருக்கிறது. அதற்கான பணிகள் செய்ய உள்ளோம் . அதற்கு ஒரு ரூபாய் கூட வாங்கமாட்டோம் என்கிறார்கள்.