திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி தாலுக்காவில் உள்ளது இருள் நீக்கி கிராமம். கஜா புயலால் இக்கிராமத்தில் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பயிர் காப்பீடு அறிவித்தால் பணம் பெறுவதற்காக தற்போது விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிட்டா அடங்கல் பெறுவதற்கு மனு அளித்துக்கொண்டுள்ளனர்.
அக்கிராம தலையாரியான இராமச்சந்திரனிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மனு வாங்கும்போது ஒவ்வொரு மனுவுக்கும் தலா ரூபாய் 100 வசூலிக்கிறார். இதை வீடியோவாக எடுத்த சிலர், அதனை வாட்ஸ் அப்பில் பரப்பிவிட்டுள்ளனர்.
கஜா புயலால் வீடு, விவசாயம், கால்நடை என எல்லாவற்றையும் இழந்து நிற்கும் தங்களுக்கு வெளி மாவட்டங்களில் இருந்து பேர், ஊர் தெரியாதவர்கள் வந்து உதவி செய்துவிட்டு போகிறார்கள்.
இந்த ஊரிலேயே இருக்கிறோம். எங்களை நன்றாக தெரிந்த இந்த அரசு அலுவலர்கள், நாங்கள் நிலைகுலைந்து நிற்கும் இந்த நிலையிலும் மிரட்டி பணம் வாங்குவதை பாருங்கள். இந்த அரசின் உதவி எப்போது கிடைக்கும், கிடைக்குமா? கிடைக்காமல் போகுமா என்று தெரியாது. இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடாமல் இருக்குமாறு வேண்டுகிறோம் என்றனர் விவசாயிகள்.