Skip to main content

கரையை கடக்கிறது கஜா 

Published on 16/11/2018 | Edited on 16/11/2018
s

 

வேதாரண்யத்தில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள கஜா புயல்  கரையை கடக்க தொடங்கியது.  நாகப்பட்டினம் - வேதாரண்யம் இடையே கரையை கடக்கிறது.   இதனால் 110 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசுகிறது,.  மழையும் வீசத்தொடங்கியதால் மரங்கள் வேறோடு சாய்ந்துள்ளன.   நிலைமையை உணர்ந்து மக்கள் எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.    கான்கிரீட் கட்டடங்களில் மட்டுமே மக்கள் தங்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.   

 

கரையை கடக்கத்தொடங்கியுள்ள கஜா, அதிகாலை 3 மணிக்கு முழுவதுமாக வேதாரண்யம் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

புயலினால் நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மின்சாரம் துண்டிக்கப் பட்டுள்ளது.  திருவாரூர் மாவட்டத்திலும் காற்று, மழையினால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.  பட்டுக்கோட்டையிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.    காற்று, மழையின் காரணமாக ராமேஸ்வரம் பாம்பன் பாலமும் மூடப்பட்டது.   

 

சார்ந்த செய்திகள்

Next Story

கஜா விட்டுச்சென்ற சுவடுகள்....இன்றளவும் மாறவில்லை!! கண்டுகொள்ளுமா தமிழக அரசு?? 

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலின் கோர தாண்டவம் நிகழ்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. ஆனாலும் புயலில் ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதுதான் தற்போதைய நிலவரமாக இருக்கிறது.
 

The trails left by Khaja


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 15-ம் தேதி நள்ளிரவில் துவங்கிய கஜா புயல் 16 ம் தேதி அதிகாலை வேதாரண்யம் கடற்பகுதியில் கரையை கடந்து நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களை நாசப்படுத்தி பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. புயலில் அதிகம் பாதிப்புக்குள்ளான வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி மக்களின் வாழ்வாதாரமாக இருந்து வந்த தென்னை, மா, பலா உள்ளிட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன, குடியிருந்த வீடுகளும் இடிந்து நாசமாகின. கால்நடைகளும் இறந்து தண்ணீரில் மிதந்தன, மீனவர்களின் படகுகளும், வலைகளும் புயல் காற்றில் சிதைந்து மண்ணோடு மண்ணாகி புதைந்தன. காற்றின் வேகத்தில் கடல் சேர் கிராமங்களில் புகுந்து வீடுகளையும், விவசாய நிலங்களையும் பாழாக்கின. நடவு செய்யப்பட்டிருந்த பயிர்கள் முழுவதும் பதறாகிபோகின, உப்புத்தயாராகும் உப்பளங்கள் முழுவதும் நிர்மூலமாகின, கோடியக்காடு உருத்தெரியாமல் சிதைந்துபோனது, அதில் வாழ்ந்த விலங்கள் பலியாகி கடற்கரை மணலில் புதைந்துகிடந்தன. தகவல் தொடர்பு, மின்கம்பங்கள் முரிந்து நாசமாகியது.

பாதிப்புக்கு உள்ளாகி வீதிகளில் நின்ற மக்களுக்கு தொண்டு நிறுவனங்களும், சமுக ஆர்வலர்களும் ஓடிவந்து உதவிகள் செய்தனர். மிகவும் தாமதமாக முதற்கட்ட நிவாரணத்தை அரசு வழங்கியது. ஆனாலும் முழுமையாக சென்றடையவில்லை என்கிற குமுறல் ஓராண்டாகியும் அந்தப்பகுதியில் தற்போதும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறது. சிதைந்த வீடுகளைக்கூட சரி செய்யமுடியாத நிலையிலும், முறிந்த மரங்களைக்கூட அப்புறப்படுத்த முடியாத நிலையிலும் தான் அந்த மக்கள் இருக்கின்றனர்.

இது குறித்து பாதிப்புக்குள்ளான கோடியக்கரை மக்களோ," எங்களின் வாழ்வாதாரமே உப்பளத் தொழில்தான், புயலால் மொத்த தொழிலும் பாதிப்பாகிவிட்டது. நான்கில் ஒரு பங்கு உப்பளங்கள் கூட தற்போது மிஞ்சவில்லை. ஒரு ஆள் செய்ய வேண்டிய வேலையை தற்போது பத்து ஆட்கள் செய்து கிடைக்கிற கூலியை வைத்துக்கொண்டு ஜீவனம் செய்கிறோம். அரசு காங்கிரீட் வீடுகள் கட்டித் தருகிறோம், என்று கூறினார்கள் பேச்சளவில் இருக்கிறதே தவிர இன்று வரை எங்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஒரு மூட்டை உப்பை அள்ளி தைத்து அடுக்குவதற்கு 4 ரூபாய் தான், இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய முடியும்."என்று வேதனையோடு கூறுகிறார்கள் அந்த மக்கள்.
 

The trails left by Khaja


புயலில் கடுமையாக பாதிப்புக்குள்ளான கத்தரிப்புலம் விவசாயி கண்ணனோ," கோடிக்கணக்கான தென்னைமரங்கள், உயிர்வாழ் மரங்களும் முறிந்துபோனது, அதற்கு எடுக்கப்பட்ட முதற்கட்ட கணக்கெடுப்பிலேயே பாதிப்பேருக்கு மேல் நிவாரணம் கொடுக்கப்படவில்லை. ஒரு தென்னங்கன்றை பயிரிட்டு மரமாக்க முப்பது வருஷம் ஆகிவிடும். சாய்ந்த, முறிந்த மரங்களைக் கூட இன்னும் அப்புறப்படுத்த முடியாத நிலமையில்தான் பாதிப்பேருக்கு மேல் இருக்கிறோம். அமைச்சர்களும், அதிகாரிகளும் புயல் அடித்த பிறகு, வந்தவர்கள்  அதை செய்கிறோம், இதை செய்கிறோம், என்றார்களே தவிர ஒன்றையும் திரும்பிக்கூட பார்க்கவில்லை." என்கிறார் கவலையாக.

புயல் கரையை கடந்த புஷ்பவனம் மீனவர் கிராமமோ சகதியில் சிக்கி சின்னாபின்னமாகி நிலையில் இருந்து இன்னும் மீளவில்லை. அங்குள்ள மீனவர் மனோகரனோ," புயல் கரையை கடந்து ஓராண்டாகிவிட்டது, புயல் கொண்டுவந்து ஒதுக்கிய கடல் சேர், வீடுகளிலும் தெருக்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் புகுந்து மொத்த கிராமத்தையும் புரட்டிப்போட்டது, ஆனால் அந்த சேரை கூட அப்புறப்படுத்த அரசு ஆர்வம் காட்டவில்லை. எங்களுடைய வாழ்வாதாரம் மீன்பிடிதான். சுனாமியில் கூட இப்படி நொடித்துப்போகவில்லை, இந்த புயல் எங்களை முழுமையாக புரட்டிப் போட்டுவிட்டது. அரசும் எங்களை கைவிட்டு விட்டது, இனி வரும் காலங்களிலாவது அரசு எங்களின் வாழ்வாதரத்திற்கு வழிவகை செய்ய வேண்டும்," என்றார் வேதனையோடு.
 

The trails left by Khaja


இது குறித்து நாகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனிடம், "கஜா புயல் தாக்கி ஒராண்டுகள் நிறைவடையப்போகிறது. வீடுகளை இழந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு சார்பில் ஒரு லட்சம் நிரந்தர வீடுகள் கட்டித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வேதாரண்யத்தில் அறிவித்தார். ஆனால், இதுவரை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒரு வீடு கூட இன்னும் கட்டித்தரப்படவில்லையே" என்று கேட்டதற்கு பதிலளித்தவர்.

"பட்டா இருப்பவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுப்பதில் சிக்கல் எதுவும் இல்லை. ஆட்சேபத்திற்குரிய அரசு நிலங்கள் மற்றும் கோவில் நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்கி அதன் பின் வீடு கட்டித் தரும் நிலையே ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் முதன் முறையாக நகராட்சி, பேருராட்சி பகுதிகளில் குடிசை மாற்று வாரியம் மூலம் ஒவ்வொரு வீடும் 10 லட்ச ரூபாய் செலவில் அரசு சார்பில் அடுக்குமாடி வீடுகளாக கட்டித் தரப்படும். வேதாரண்யம், தலைஞாயிறு பேரூராட்சிக்கு 6000 வீடுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது." என்று கூறி முடித்தார்.

கஜா புயலின் கோர தாண்டவத்தை கண்டு கலங்காத மனித மனமே இல்லை என்று சொல்லலாம். ஆனால் ஆளும் அரசோ அந்த நேரத்தில் மட்டும் கண்டுகொண்டதோடு, கைவிட்டுவிட்டது. கேட்பாரற்று கிடக்கும் அந்த மக்கள் இன்னும் அரசை மட்டுமே நம்பி காத்திருக்கிறார்கள்.


 

Next Story

கஜாவின் கோரதாண்டவம்.. திரும்பியதா இயல்பு வாழ்க்கை ?

Published on 16/11/2019 | Edited on 16/11/2019

2018 நவம்பர் 15 நள்ளிரவுக்கு பிறகு கஜா என்றும் புயல் தமிழக கடற்கரையில் கரையை கடக்கிறது. கடலூர் பக்கம் கரையை கடக்கலாம், இல்லை இல்லை கடலூருக்கும் பாம்பனுக்கும் இடையில் கரை கடக்கும்.. இல்லை டெல்டா மாவட்ட கடலில் கரை கடக்கும் என்று மாறி மாறி வானிலை அறிக்கைகள் வந்து கொண்டிருந்த நேரம். மக்கள் சற்று உஷாரகவே இருந்தனர்.

15 ந் தேதி இரவு 10 மணிக்கு பிறகு புதுக்கோட்டை மாவட்டத்தின் உள் பகுதியில் உள்ள கிராமங்களில் மழை தொடங்கியது. காற்றும் வீசத் தொடங்கியது. கடல் கரை ஓரத்தில் புயல் கரையை கடந்தாலும் உள்மாவட்டங்களில் பாதிப்பு இருக்காது என்று நினைத்துக் கொண்டு படுக்கப் போனார்கள். ஆனால் படுக்கையில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. காற்றின் வேகம் அதிகரிக்கத் தொடங்கியது. நள்ளிரவு 12 மணிக்கு பிறகு காற்றின் வேகத்தில் கூடுதல் சக்தி இருந்தது.

விண்ணைத் தொட முயற்சித்து வளர்ந்திருந்த தென்னை மரங்களை அசைத்துப் பார்த்தது காற்று மண்ணைத் தொட்டுவிட்டு மீண்டும் எழுந்தது. ஆனால் காற்று அசுரன் மறுபடி மறுபடி தென்னையை ஆட்டிப் படைத்தது. அந்த அகோர ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை தென்னையால். 16 ந் தேதி அதிகாலை 3 மணிக்கு பிறகு கஜா வின் ஆட்டம் அதிகமானது. நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தோப்புகளாக நின்ற தென்னை மரங்கள் ஒன்றோடு ஒன்றாக சாய்ந்தது. பல மரங்கள் முறிந்து விழுந்தது. 

தென்னை மட்டுமா விழுந்தது மா, பலா, வாழை, தேக்கு, சந்தனம், சவுக்கு, மட்டுமல்ல பல புயலை பார்த்துவிட்டுட்டு 100 வருடங்கள் கடந்து நின்ற புளி, ஆல், அரசு மரங்களும் உடைந்து சாய்ந்தது. ஒட்டுமொத்த மரங்களும் சாய்ந்து மின்கம்பங்கள், மதில் சுவர்கள், கட்டிடங்கள் எல்லாம் உடைந்த போதும் கஜாவின் உக்கிரம் குறையவில்லை. பல ஆயிரம் வீட்டுச் சுவர்களை உடைத்து கொட்டகைகளை பிய்த்துக் கொண்டு பறந்தது. 

கரை ஏற்றி நிறுத்தி இருந்த படகுகளை காணவில்லை. உடைத்துக் கிடந்தது. அதிகாலை 5 மணிக்கு பிறகு இன்னும் உச்சத்தில் நின்று ஆடிய கஜா வின் ஆட்டத்திற்கு எந்த மரமும் மிஞ்சவில்லை. விடியும் போது வீட்டைவிட்டு யாரும் வெளியே வரமுடியவில்லை. ஆசை ஆசையாய் வீட்டு வாசலில் வளர்த்த மரங்கள் வீட்டு வாசலை அடைத்துக் கொண்டு கிடந்தது. அடுத்த வேளை சமைக்க முடியவில்லை. அடுத்த நாள் குடிக்க தண்ணீர் இல்லை. உள்ளூர் இளைஞர்கள் அரிவாளும் கையுமாக களமிறங்கி முதலில் சாலைகளில் கிடந்த மரங்களின் கிளைகளை வெட்டி அகற்றி புதிய வழிகளை ஏற்படுத்தினார்கள். வெளியூர்களில் இருக்கும் நண்பர்களுக்கு தகவல் சொல்லி மரம் அறுக்கும் இயந்திரம் வாங்கி வரச் சொன்னார்கள். அந்த இயந்திரங்கள் வந்து சேர 3 நாட்களுக்கு மேல் ஆனாது. இயந்திரங்களைக் கொண்டு மரங்களை அறுத்து போக்குவரத்துகளை தொடங்கிவிட்டனர். அதுவரை அதிகாரிகளும் வரவில்லை. அமைச்சர்களும் எட்டிப்பார்க்கவில்லை. காரணம் வழியில்லை என்பதை சொல்லிக் கொண்டனர். 

2 நாட்களுக்கு பிறகு குடிக்க தண்ணீர் இல்லை. குடிதண்ணீர் எற்ற மின்சாரம் இல்லை. மின்கம்பங்கள் மரங்களுக்குள் சிக்கிக் கிடந்தது. மின் கம்பிகள் மரக்கிளைகளில் பின்னிக் கிடந்தது. உடனடியாக ஜெனரேட்டர்களை கொண்டு வந்து குடிதண்ணீருக்கு வழி செய்த இளைஞர்கள் கிடைத்த பொருளை வைத்து சமைத்து கொடுத்தார்கள்.

3 நாட்களுக்கு பிறகு தன்னார்வலர்கள் அவர்களால் முடிந்த உணவு, உடைகளுடன் கிராமங்கள் நோக்கி வந்தனர். அரசாங்கம் வந்து பார்க்க வாரம் ஆனது நிவாரணம் கொடுக்க மாதம் ஆனது. கொடுத்த நிவாரணமும் சரியாக கிடைக்கவில்லை. இழப்பீடு கொடுப்போம் என்றார்கள். இன்றுவரை கிடைக்கவில்லை என்பது தனிக்கதை.

தன் வீட்டு தோட்டத்தில் விழுந்து கிடந்த மரங்களை வெட்டி அகற்ற 7, 8 மாதங்கள் வரை ஆனது. அகற்றப்பட்ட தென்னை மரங்களை செங்கல் சூளைக்கு விறகாக ஏற்றிச் சென்றனர். இன்று வரை ஏற்றிச் செல்கிறார்கள்.  மற்ற மரங்களை விற்க முடியவில்லை. அடிமாட்டு விலைக்கு கொடுத்துவிட்டு அந்த பணத்தில் மற்ற மரங்களை வெட்டி அகற்றினார்கள். தென்னைக்கு நிவாரணம் கொடுத்து அந்த பணமும் பத்தவில்லை என்றார்கள். அதிலும் பதிவு இல்லை என்று புறக்கணித்தார்கள். அனைத்து மரங்களுக்கும் நிவாரணம் உண்டு என்று கணக்கெடுத்தார்கள். அத்தோடு சரி.

நெடுவாசல் வந்த மத்திய  அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அசாம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து ராணுவ கப்பலில் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து விவசாயிகளுக்கு வழக்குவோம் என்று சொல்லிவிட்டு போனவரை இதுவரை காணவில்லை.

முதல்வர் எடப்பாடி ஒரு லட்சம் வீடுகள் கட்டிக் கொடுப்போம் என்று சொன்னார்.. முதல்வர் சொன்ன வீடு நமக்கும் வரும் என்று காத்திருந்தார்கள். வருடம் ஒன்று ஓடிவிட்டது ஒரு வீடு கூட வரவில்லை. தனியாரும், அரசும் கொடுத்த பிளாஸ்டிக் தார்பாய்கள் வீட்டின் கூரைகளானது. அந்தக் கூரைகளும் வெயிலில் கிழிந்து அந்த ஓட்டையை அடைக்க தென்னை மட்டைகள் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிறது.

ஒரு வருடமாக மக்கள் படும் துயரம் சொல்ல முடியாது. கடன் மேல் கடன் வாங்கி கன்றுகளை நட்டுவிட்டு வளர்க்க முடியாமல் தவித்து வருகிறார்கள். மகன், மகள்களின் எதிர்காலத்தை எண்ணி செம்மரங்களை நட்டு வளர்த்த விவசாயிகள் அந்த மரங்களை விற்க முடியாமல் இன்றளவும் தவித்து வருகிறார்கள்.

புயலில் அழிந்த மரங்களை மீட்க மறுபடியும் களமிறங்கிய இளைஞர்கள், தன்னார்வ அமைப்புகள் கோடிக்கணக்காண மரக்கன்றுகளை நட்டு வளர்க்கத் தொடங்கிவிட்டனர். பிறந்த நாளை கூட மரக்கன்று நட்டு கொண்டாடி வருகிறார்கள்.

கோடி கோடியான மரங்கள் அழிந்ததைப் பார்த்த திருவரங்குளம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கோகுலகிருஷ்ணன் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகளை வளர்த்து கிராமங்கள் தோறும் பழத்தோட்டங்களை அமைத்து வருகிறார். நெடுஞ்சாலைத் துறையினர் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்க்கிறார்கள்.

புயலின் தாக்கம் அன்றோடு முடியவில்லை. இன்றளவும் அதன் வெளிப்பாடு இருக்கிறது. உயிரோடு நின்ற மரங்களும் பட்டுக் கொண்டிருக்கிறது. தென்னை மரங்கள் காய்க்க மறந்துவிட்டது. இதனால் லட்சக்கணக்காண விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தென்னை சார்ந்த தொழிலாளர்கள் வேலை இழந்து நிற்கிறார்கள். மற்றொரு பக்கம் மனநிலை பாதிப்பு, சுவர் இடிந்து பலி என்ற இன்றைக்கும் நடந்து கொண்டிருக்கிறது.

ஆனால் அரசாங்கம் சொன்னது என்னாச்சு என்ற கேள்வி இன்றளவும் புயல் பாதித்த பகுதியில் கேட்கிறது.. மீள முடியாத வேதனையில் விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள் உள்ளனர் என்பதே நிதர்சனம்.