திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் எதிர்ப்பை மீறி போலிசாரின் பலத்த பாதுகாப்போடு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம் கானூர் கிராம பகுதியில் கெயில் நிறுவனம் விளை நிளங்களின் வழியாக எரிவாயுகுழாய் பதிக்க முதற்கட்ட பணிகளை கடந்த பிப்ரவரி மாதம் துவங்கியது. விவசாயிகள், மற்றும் பொதுமக்கள் ஒன்று திரண்டு விவசாயம் பாழாய் போவதாகவும், குடி தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாகவும், பல்வேறு நோய்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், பசுமையான நிலங்கள் பாலைவனமாகி விடும் என்றும் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தனர்.
விவசாயிகளின் தொடர் போராட்டத்தால் குழாய் பதிக்கும் பனியை நிறுத்தி வைத்திருந்தது கெய்ல் நிறுவனம்.
இந்த நிலையில், நூற்றுக்கும் அதிகமான போலிசாரை கொண்டு வந்து நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவர்களை அச்சுறுத்தியபடி குழாய் பதிக்கும் பணியை துவங்கியுள்ளனர். போராட்டத்தை முன்னெடுத்து நடத்துவதாக கூறி அடியாக்கமங்கலத்தை சேர்ந்த ராஜ பாண்டி. நவாஷ் ஆகியோரை திருவாரூர் தாலுக்கா போலிசார் கைது செய்துள்ளனர்.
விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி போலிசாரின் பாதுகாப்போடு கெயில் நிறுவனம் குழாய் பதிக்கும் பணியை துவங்கியிருப்பது டெல்டா மாவட்ட விவசாயிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது.
விரைவில் மக்களை ஒன்று திரட்டி நெடுவாசல், கதிராமங்கலத்தைப் போல் போராட்டத்தை நடத்த உள்ளோம் என்கிறார்கள் போராட்டக்காரர்கள்.