நெல்லை மாவட்டத்தின் குளியன்குடி அருகே உள்ளது மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியை ஒட்டி ஏராளமான விவசாய நிலங்கள் உள்ளன. அதில் எப்போதும் விவசாய பயிர்கள் செய்யப்படும், அதனையொட்டி தென்னந்தோப்புகளும் உள்ளன. அந்தப்பகுதியில் குருசாமி என்பவரது நிலமும் உள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு மலைப்பகுதியிலுள்ள யானை கூட்டங்கள் தண்ணீர் அருந்துவதற்காக இந்த விளைநிலப்பகுதிக்குள் வந்துள்ளன. அந்த யானைகள் தென்னந்தோப்பிலுள்ள தென்னை மரத்தையும் சேதப்படுத்தியுள்ளன.
இதனிடையே அந்த யானைகளில் சுமார் 4 வயதுடைய குட்டி யானை ஒன்று அங்குள்ள 50 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்திருக்கிறது. அதில் 15 அடி ஆழம் வரை தண்ணீரும் உள்ளது. இதனிடையே இன்று காலை தன் விவசாய நிலத்திற்கு சென்ற குருசாமி கிணற்றிலிருந்து சத்தம் வருவதைக் கேட்டு எட்டிப்பார்த்திருக்கிறார். அப்போது குட்டியானை தண்ணீரில் நீந்தியபடி உயிருக்கு போராடியிருக்கிறது. உடனே அவர் குளியன்குடி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்திருக்கிறார். ரேஞ்சர் அயுக் கான் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். தவித்த யானையைக் கண்டவர்கள் அதை மீட்பதற்கு கடுமையாக போராடியிருக்கிறார்கள். இறுதியாக ஜே.சி.பி. இயந்திரம் வரவழைக்கப்பட்டு அதன்மூலம் பெரும் பள்ளம் தோண்டப்பட்டது அதன் வழியாக கயிறுகளைக்கொண்டு யானையை மீட்டனர். இந்தப் போராட்டம் 4 மணிநேரம் வரை நீடித்துள்ளது. அது எப்போது விழுந்ததென்று தெரியாது, ஆனாலும் அதை உயிரோடு மீட்டுவிடவேண்டுமென்று நாங்கள் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்தது. குட்டி யானையும் வனப்பகுதிக்குள் சென்றுவிட்டது என்றார்கள் வனத்துறையினர்.